ஆழ்வார் : டெல்லி நோக்கி சென்ற இரண்டடுக்கு அதிவிரைவு ரயிலின் சக்கரத்தில் இருந்து தீடீரென புகை வெளியேறியதால் பயணிகள் பதற்றத்திற்கு உள்ளாகினர். ஜெய்ப்பூரில் இருந்து தலைநகர் டெல்லிக்கு இரண்டடுக்கு வசதி கொண்ட அதிவிரைவு ரயில் சென்று கொண்டு இருந்தது.
ராஜஸ்தான் மாநிலம் பசவா ரயில் நிலையம் அருகே ரயில் சென்று கொண்டு இருந்த நிலையில் திடீரென ரயில் சக்கரத்தில் இருந்து கரும் புகை வெளியேறியது. ரயில் சக்கரத்தில் இருந்து திடீரென புகை வெளியேறுவதை கண்டு அதிர்ந்து போன பயணிகள் ஓட்டுநருக்கு தகவல் அளித்து உள்ளனர்.
இதனால் ரயில் பசவா ரயில் நிலையம் அருகே பாதி வழியில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து ரயில்வே வாரிய பொறியாளர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனிடையே புகை வெளியேறிய சக்கரத்தில் பயணிகள் சேர்த்து தண்ணீர் ஊற்றி மேற்கொண்டு தீ பிடிக்காமல் பார்த்துக் கொண்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே பொறியாளர்கள் சக்கரத்தில் ஏற்பட்ட கோளாறை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரம் கழித்து கோளாறு சீரமைக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட்டு மீண்டும் ரயில் புறப்படத் தயாரானது. ரயில் சக்கரத்தில் ஏற்பட அழுத்தம் மற்றும் அதனால் உருவான அதிக வெப்பத்தின் காரணமாக புகை வெளியேறியதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தால் ரயிலில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என ரயில்வே அதிகாரிகள் கூறினர். ஓடும் ரயிலில் இருந்து திடீரென புகை கிளம்பிய சம்பவம் பயணிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது. முன்னதாக கடந்த 9 ஆம் தேதி சென்னை - டெல்லி ராஜதானி விரைவு ரயிலில் இதேபோல் புகை கிளம்பியதால் பயணிகள் பதற்றத்திற்கு உள்ளாகினர்.
ஆந்திர பிரதேச மாநிலம் நெல்லூர் அடுத்த காவாலி ரயில் நிலையம் அருகே ரயில் சென்று கொண்டு இருந்த போது, திடீரென ரயில் சக்கரத்தில் இருந்து புகை வெளியேறியது. இதனால் பயணிகள் அச்சத்திற்குள்ளாகினர். நடுவழியில் ரயில் நிறுத்தப்பட்டு பழுது நீக்கப்பட்டது. சுமார் 20 நிமிட தாமதத்திற்கு பின் மீண்டும் ரயில் புறப்பட்டது.
இதையும் படிங்க : நீச்சலில் அலைபாயும் நடிகர் மாதவனின் மகன் - நாட்டுக்காக 5 தங்க பதக்கங்கள் வேட்டை!