டெல்லி: விவசாயிகள் சங்கங்களின் தலைமை ஒருங்கிணைப்பு அமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) அமைப்பினர் ஆறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரமதருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
சம்யுக்த கிஷான் மோர்சா அமைப்பு எழுதியுள்ள கடிதத்தில், "நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகள், நவம்பர் 19ஆம் தேதி காலையில் உங்களின் அறிவிப்பை கேட்டனர். அதில், மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது குறித்து நீங்கள் அறிவித்தது வரவேற்கத்தக்கது. மேலும், இதை விரைவாக அரசு நடைமுறைப்படுத்தும் என நம்புகிறோம்.
MSP சட்டப்படியான உத்தரவாதம்
இந்த மூன்று கறுப்புச் சட்டங்களை திரும்பப்பெறுவது மட்டும் எங்களின் கோரிக்கை இல்லை என்பதை பிரதமராகிய நீங்கள் நன்கு அறிவீர்கள். போராட்டத்தின் ஆரம்பத்தில் இருந்து சம்யுக்தா கிஷான் மோர்ச்சா அமைப்பு கூடுதலாக மூன்று கோரிக்கைகள் முன்வைத்தது. அந்த கோரிக்கைகள் பின்வருமாறு:
1. குறைந்தபட்ச ஆதார விலையை (Minimum Support Price) ஒரு சென்ட் C2+50 வீதம் எனக் கணக்கிட வேண்டும். (C2+50 என்றால் உற்பத்தி விலையில் 50 விழுக்காடு அதிகம்). இது, விவசாயிகளின் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையில் உத்தரவாதம் அளிக்கும்.
2. அரசால் கொண்டுவரப்பட்ட மின்சாரத் திருத்தச்சட்டத்தின் முன்வடிவை திரும்ப பெறவேண்டும். பேச்சுவார்த்தையின் போது அதை திரும்பப் பெறுவதாக உறுதியளிக்கப்பட்டது. ஆனால், அதைமீறி நாடாளுமன்றத்தின் தீர்மானங்கள் பட்டியலில் தற்போது அது இடம்பெற்றுள்ளன.
3. நாட்டின் தலைநகர் பகுதி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் உள்ள காற்று தர மேலாண்மை ஆணைய சட்டம் 2021இன் கீழ் உள்ள விவசாயிகள் மீதான தண்டனை விதிகளை நீக்க வேண்டும்.
போராட்டத்திற்கு பின்னான பிரச்சினைகள்
உங்களின் வாக்குறுதியில் மேற்கூறிய பிரச்சினைகளுக்கு உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் போராட்டத்தின் மூலம் மூன்று சட்டங்களை திரும்பப் பெறுதல் மட்டும் இல்லாமல் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்படியான உத்திரவாதமும் விவசாயிகளுக்கு அளிக்கப்படும்.
இந்தப் போராட்டக் காலத்திற்கு பின்னர் வேறு சில பிரச்சினைகளும் எழுந்தன, அவற்றையும் உடனடியாக பரிசீலிக்க வேண்டும். அவை பின்வருமாறு:
4. கடந்தாண்டு ஜூன் முதல் டெல்லி, ஹரியானா, சண்டிகர், உத்தரப் பிரதேசம் மற்றும் பிற மாநிலங்களில் நடைப்பெற்ற விவசாயப் போராட்டத்தில் ஏறத்தாழ ஆயிரம் விவசாயிகள் மீது நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்ட்டுள்ளன. அவற்றை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
5.லக்கிம்பூர் கெரி வன்முறையில் மூளையாக செயல்பட்டவரும், 120பி பிரிவின்கீழ் குற்றஞ்சாட்டப்பட்டவருமான அஜய் மிஸ்ரா (ஒன்றிய உள்துறை இணையமைச்சர்) சுதந்திரமாக இருக்கிறார். உங்களது அமைச்சரவையிலும் நீடிக்கிறார். மேலும், உங்களுடனும் பிற மூத்த அமைச்சர்களுடனும் ஒரே மேடையில் அமர்ந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். அவரை பதவி நீக்கம் செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும்.
6. இந்தப் போராட்டத்தின்போது, சுமார் 700 விவசாயிகள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம், அவர்களின் மறுவாழ்வுக்கு உரிய நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும். மேலும், போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த விவசாயிகளுக்கு நினைவுச் சின்னம் அமைக்க சிங்கு எல்லையில் நிலம் ஒதுக்கப்பட வேண்டும்.
போராட்டம் தொடரும்
பிரதமராகிய நீங்கள் விவசாயிகளை வீடு திரும்பும்படி கேட்டுக்கொண்டீர்கள். நாங்கள் தெருக்களில் அமர்ந்திருக்க விரும்பவில்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்தப் பிரச்சினைகளை விரைவாக தீர்த்து எங்கள் வீடுகள், குடும்பங்கள், விவசாயத்தை பார்க்க செல்ல வேண்டும்.
இதையே தான் நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால் மேற்குறிப்பிட்ட ஆறு பிரச்சனைகள் குறித்து எங்கள் அமைப்பிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டு தீர்வுகாண முயற்சி செய்யுங்கள். அதுவரை, நாங்கள் எங்களின் போராட்டத்தை தொடர்வோம்" எனக் குறிப்பிட்டுள்ளது.
விவசாயிகள் திட்டமிட்டப்படி நவ.29ஆம் தேதி நாடாளுமன்ற முற்றுகை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Vir Chakra for Abhinandan: வீர் சக்ரா விருதுபெற்றார் போர் வீரர் அபிநந்தன்!