உத்தரகாண்ட்: உக்ரைனில் போர் நடந்துவரும் நிலையில், உக்ரைனைச் சேர்ந்த சஃபி என்ற பெண்மணி, கடந்த மாதம் உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் தனது நான்கு குழந்தைகளுடன் தஞ்சமடைந்துள்ளார்.
இந்த நிலையில், சஃபியின் இரண்டாவது மகள் அபயா(6)-வுக்கு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. சஃபியின் குடும்பத்தில் உள்ள பெரும்பாலானோர் மருத்துவர்கள் என்பதால், இதுகுறித்து அவர்களிடம் கேட்டுள்ளார். சிறுமிக்கு அப்பென்டிக்ஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்றும், உடனடியாக மருத்துவமனைக்கு செல்லும்படியும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் சஃபியிடம் பணம் இல்லாததால், அவர் உத்தரகாசியில் உள்ள செஞ்சிலுவை சங்கத்திடம் உதவி கேட்டுள்ளார். இதையடுத்து, செஞ்சிலுவை சங்கத்தினர், சுகாதாரத்துறை அதிகாரிகள் உதவியுடன் சிறுமியை மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் சிறுமிக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. மகளின் உயிரைக் காக்க உதவிய செஞ்சிலுவை சங்கத்திற்கு சஃபி நன்றி தெரிவித்துக் கொண்டார்.