மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஷ் யெச்சூரி (34), கரோனா தொற்று பாதிப்பால் காலமானார்
டெல்லி குர்கானில் தனியார் மருத்துவமனையில் கடந்த 2 வாரங்களாக சிகிச்சைபெற்று வந்த அவர், இன்று காலை 5.30 மணியளவில் உயிரிழந்தார். இவர் டெல்லியில் உள்ள பத்திரிகை ஒன்றில் பணியாற்றிவந்தது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக சீதாராம் யெச்சூரி தனது ட்விட்டர் பக்கத்தில், "கரோனா தொற்றுக்கு எனது மூத்த மகன் ஆஷிஷ் யெச்சூரியை இழந்துவிட்டேன் என்பதை மிகுந்த வேதனையோடு தெரிவித்துக் கொள்கிறேன். கடினமான நேரத்தில் எங்களுக்கு நம்பிக்கை ஊட்டிய அனைவருக்கும், என் மகனுக்கு சிகிச்சையளித்த் மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
யெச்சூரியின் மகன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உள்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், " ஆஷிஷ் யெச்சூரியின் மறைவு செய்தி மிகுந்த வலியையும் வேதனையையும் அளிக்கிறது. இந்தக் கடினமான நேரத்தில் சீதாராம் யெச்சூரிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.