இந்தியா-சீன எல்லைப் பகுதியான கிழக்கு லடாக் பகுதியில் இரு தரப்பு ராணுவமும் கடந்த 10 மாதங்களாக மோதல் போக்கில் இருந்துவந்தன. கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலில் இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து நிலைமையை சீர் செய்யும் விதமாக இரு நாட்டு ராணுவமும் உயர்மட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இதுவரை ஒன்பது கட்ட பேச்சுவார்த்தை முடிந்த நிலையில் இரு நாட்டு ராணுவமும் கிழக்கு லடாக் பகுதியிலிருந்து படைகளை விலக்கிக்கொள்ள முடிவு செய்தன.
இதுதொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது, ராணுவம் மற்றும் அலுவல் ரீதியான பேச்சுவார்த்தைக்குப்பின் கிழக்கு லடாக் பகுதியில் இரு நாட்டு ராணுவங்களும் படை விலகல் நடவடிக்கையை முழுமையாக மேற்கொண்டுள்ளன. ஆனால், காங்கிரஸ் இந்திய ராணுவத்தின் வீரத்தின் மீது சந்தேகத்தை கொண்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது. இது அவர்களின் உயரியத் தியாகத்தை அவமதிப்பதாகும் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஒற்றுமை, உறுதிப்பாடு, இறையாண்மை ஆகியவற்றில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஒருபோதும் சமரசம் செய்துகொண்டதில்லை எனவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: புதுவையில் தொடரும் ராஜினாமா; திமுக எம்.எல்.ஏ. வெங்கடேசன் பதவி துறப்பு