கர்நாடக மாநிலம், சிவமொக்கா (மாவட்டம்) தாலுகா அப்பலகெரே கிராமம் அருகே ஹுனசூரு கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமம் அருகே ரயில் தண்டவாளத்திற்கு தேவையான கற்களை உடைக்கும் கல்குவாரி ஒன்று அமைந்திருக்கிறது.
நேற்றிரவு (ஜன.21) அந்த கல்குவாரிக்கு ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டைனமைட் வெடி பொருட்களை ஏற்றிக்கொண்டு, ரயில்வே கிரசர் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென வெடித்து சிதறியது. இந்த விபத்தில் லாரியில் இருந்த வெடி பொருட்கள் அனைத்து வெடித்தும் சிதறின. லாரியும் வெடித்து சிதறி சுக்கு நூறாகியது.
இந்த விபத்தில், ஐந்து தொழிலாளர்கள் உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத்தைச் சுற்றியுள்ள பல வீடுகள் சேதமடைந்தன. இரவு 10.30 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில் சிவமொக்கா, சிக்கமகளூரு, உத்தர கன்னடா, தாவன்கேரே உள்ளிட்ட பகுதிகளும் பாதிக்கப்பட்டன. புறநகரில் உள்ள குவாரிக்கு லாரியில் கொண்டுவரப்பட்ட ஜெலட்டின் குச்சிகள், டைனமைட் வெடித்ததால், இந்தப் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதாக, சிவமொக்கா மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்தியது.
வெடி விபத்துக்குக் காரணமான லாரியில் 50 ஜெலட்டின் குச்சிகள் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகிறது. விபத்தால் ஹுனசூரு கிராமத்தின் அருகாமையில் உள்ள கிராமங்கள் கரும்புகையால் சூழப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் கூறுகையில், " இந்த வெடி விபத்தின் தீவிரத்தால் ட்ரக் முழுவதும் வெடித்து சிதறியது. அங்கிருந்த ஐந்து தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். சாலையில் பெரும் விரிசல்கள் உருவாகின."
எம்.எல்.ஏ., கே.பி. அசோக் நாயக் கூறுகையில், " விபத்தில் ஏற்பட்ட புகை மூட்டம் காரணமாக, காவல்துறை, மீட்பு அலுவலர்கள் யாராலும் சம்பவ இடத்திற்குச் செல்ல முடியவில்லை. எனினும் விபத்து ஏற்பட்ட இடத்திலிருந்து உள்ளூர்காரர்களால் ஐந்து தொழிலாளர்களின் உடல்களை மீட்க முடிந்தது." என்றார். உயிரிழந்த தொழிலாளர்கள் பிகாரைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க... தங்க சுரங்கம் வெடி விபத்தில் சிக்கிய 12 பேர் உயிருடன் உள்ளனர்?