ஹிங்கோலி : மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை அறைவேன் என ஒன்றிய அமைச்சர் நாராயன் ரானே பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா கட்சியினர் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடத்திவருகின்றனர்.
ஹிங்கோலி மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் எம்எல்ஏ சந்தோஷ் பங்கர் கலந்துகொண்டார். அப்போது அவர், “ஒன்றிய அமைச்சருக்கு கொடுக்கப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பை விலக்கிக்கொண்டால், ஒருமணி நேரத்தில் அவரின் வீடு புகுந்து நானே அவரை கொன்றுவிடுவேன்” எனப் பேசினார்.
இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்நிலையில், ஒன்றிய அமைச்சர் மாநில அரசின் கைது நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கும் விதமாக முன்பிணை பெற்றுள்ளார்.
மேலும் தன் மீது போடப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) ரத்து செய்ய வேண்டும் என்றும் மும்பை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
முன்னதாக ஒன்றிய அமைச்சர் நாராயன் ரானே, “முதலமைச்சர் உத்தவ் தாக்கரே நாட்டின் சுதந்திர தினத்தை மறந்துவிட்டார். சுதந்திர தினம் குறித்து அறிந்துகொள்ள உதவியாளர் வைத்துள்ளார்” என்று மக்கள் ஆசிர்வாத யாத்திரையின்போது பேசியிருந்தார். இது சர்ச்சையாக வெடித்த நிலையில் பாஜகவினரும் சிவசேனாவும் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க : அம்பேத்கரிய எழுத்தாளர் கெயில் ஓம்வெட் மறைவு