மும்பை: மும்பையில் நடைபெற்ற தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பில் டிசம்பர் 24ஆம் தேதி சீரியல் நடிகை துனிஷா ஷர்மா தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக அவரது தாயார் வனிதா ஷர்மா அளித்த புகாரின்படி, துனிஷாவின் காதலரும் சக நடிகருமான ஷீசன் முகம்மது கான் வாலிவ் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து ஷீசனுக்கு முதலில் 4 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்ட மும்பை வசாய் நீதிமன்றம், பின்னர் நீதிமன்ற காவலை இன்று (டிச.30) வரை நீடித்தது.
இதனிடையே டிச.27ஆம் தேதி உடற்கூறு ஆய்வுக்குப் பின், துனிஷாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. நேற்று (டிச.29) முதல் துனிஷா மற்றும் ஷீசனின் மொபைல் உரையாடல்களை திரட்டும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் உயிரிழந்த துனிஷாவின் தாயார் வனிதா ஷர்மா, “ஷீசன் எனது மகள் துனிஷாவை இஸ்லாம் மதத்தை பின்பற்ற சொல்லி வற்புறுத்தினான்.
அதற்காக ஹிஜாப் அணியவும் கட்டாயப்படுத்தினான். படப்பிடிப்பு தளத்தில் போதைப்பொருளையும் ஷீசன் பயன்படுத்தினான். தற்கொலையின்போது ஷீசன் முதலில் ஆம்புலன்சை அழைக்கவில்லை. எனது மகளை அவன் கொலை செய்துள்ளான். அவன் தண்டிக்கப்படும் வரை நான் அமைதியாக இருக்க மாட்டேன்” என குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக துனிஷாவுடன் பழகும்போதே, வேறு சில பெண்களுடன் ஷீசன் தொடர்பில் இருந்ததாக வனிதா ஷர்மா குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Leena Nagvanshi: துனிஷா சர்மாவை தொடர்ந்து லீனா நாக்வன்ஷி மரணம்!