டெல்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டனர். இந்தப் பேரணி வன்முறைச் சம்பவமாக வெடித்தது. செங்கோட்டைக்குச் சென்ற போராட்டக்காரர்கள், அங்கிருந்த கம்பத்தில் ஏறி கால்சா என்னும் சீக்கியர்களின் கொடியை ஏற்றினர். இதையடுத்து, துணை ராணுவப்படை குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்தில் வெடித்த வன்முறை தொடர்பான வதந்திகளை பரப்பியதாகக் கூறி காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் மற்றும் பத்திரிகையாளர்கள் மிருனல் பாண்டே, ராஜ்தீப் சர்தேசாய், வினோத் ஜோஸ், ஜாபர் ஆகா, பரேஷ் நாத் மற்றும் ஆனந்த் நாத் ஆகியோர் மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நொய்டா காவல்துறை அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 124ஏ (தேச துரோகம்), 295ஏ, 504 (வேண்டுமென்றே அவமதித்தல்), 506(கொலை மிரட்டல்), 34(பொதுவான நோக்கத்தில் பலர் செய்த குற்றம்), 120பி(குற்றச்சதி) ஆகிய பிரிவுகளில் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் விதிகளின் கீழும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த வன்முறை சம்பவத்திற்கு அண்டை மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியின் அருகாமை நகரத்தில் வசிக்கும் நபர் அளித்த புகாரின் பேரில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:டெல்லி வன்முறை: நடிகர் தீப் சிங் சித்து மீது வழக்குப்பதிவு