தெலங்கானா: தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள ரூபி லாட்ஜில் நேற்று(செப்-12) இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. லாட்ஜில் தங்கியிருந்த ஒரு பெண் உட்பட 7 சுற்றுலாப் பயணிகள் தீ விபத்தால் ஏற்பட்ட புகையால் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், நான்கு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். காயம் அடைந்த பத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செகந்திரபாத் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அருகில் ரூபி சொகுசு பிரைட் என்ற ஐந்து மாடி கட்டிடம் உள்ளது. அக்கட்டிடத்தில் எலக்ட்ரிக் பைக் ஷோரூம் தரை தளத்தில் இயங்கி வருகிறது. மீதமுள்ள நான்கு மாடிகளில் தங்கும் வசதி கொண்ட ஒரு ஹோட்டல் உள்ளது . இந்நிலையில் நேற்று இரவு 9.40 மணியளவில் தரை தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ அதிகமாக பரவியதால் ஷோரூமில் இருந்த பைக்குகளின் பேட்டரிகள் வெப்பத்தால் வெடித்து சிதறின. இதனால், தீ மேலும் அதிகரித்தது. இதன் காரணமாக எலக்ட்ரிக் பைக்குகள் வெடித்து சிதறின.
இதனையடுத்து தீயால் உண்டான புகை மேல் தளங்களுக்கு பரவியது. இதுதவிர பேட்டரிகள் எரிந்ததால் அடர் புகையும் ஏற்பட்டது. விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். மூன்று பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் 4 பேர் மருத்துவமனையில் இறந்தனர்.
இறந்தவர்களில் விஜயவாடாவைச் சேர்ந்த ஏ.ஹரீஷ், சென்னையைச் சேர்ந்த சீதாராமன் மற்றும் பாலாஜி, டெல்லியைச் சேர்ந்த வீடேந்திரா ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் சென்னையைச் சேர்ந்த கேசவன் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் மும்பையில் பணி புரிந்த வருகிறார் என தெரிய வந்துள்ளது. மீதமுள்ளவர்களின் விவரங்கள் ஏதும் தெரியவில்லை. விபத்தையடுத்து தெலங்கானா அமைச்சர்கள் தலசானி ஸ்ரீனிவாஸ் யாதவ், மஹ்மூத் அலி, ஹைதராபாத் சிபி சிவி ஆனந்த் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
இதையும் படிங்க:ஷோபியானில் பயங்கரவாதி சுட்டுக்கொலை - பாதுகாப்புப்படை வீரர் படுகாயம்