கோவாவின் பனாஜியில் ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் வீட்டுக்கு வீடு குடிநீர் வழங்கும் திட்ட விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பிரதமர் கூறுகையில், “நாட்டில் 10 கோடி ஊரக வீடுகளுக்கு குழாய்கள் மூலம் தூய்மையான குடிநீர் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வழங்கும் அரசின் இயக்கம் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. ஒவ்வொரு வீடும் குடிநீர் குழாய் மூலம் இணைக்கப்பட்ட முதலாவது மாநிலமாக மாறியிருக்கும் கோவாவுக்கு எனது வாழ்த்துகள்.
7 கோடி கிராமப்புற குடும்பங்களை வெறும் 3 ஆண்டுகளில் குழாய் நீருடன் இணைக்கும் மத்திய அரசின் சாதனை பெரிதும் பாராட்டக்கூடியது. தண்ணீர் தொடர்பான பிரச்சனைகளில் முக்கியமாக பாதிக்கப்படுபவர்கள் பெண்கள் என்பதால், அரசின் முயற்சிகளில் பெண்களே முதன்மையாக கொண்டே வகுக்கப்படுகின்றன. இது பெண்களின் வாழ்க்கையை எளிதாக்குவதுடன், குடிநீர் பிரச்சனையை தவிர்த்து ஏழ்மையில் இருந்து முன்னேறும் எண்ணத்தை கொடுக்கிறது. ஜல் ஜீவன் இயக்கம் என்பது வெறும் அரசாங்கத் திட்டம் அல்ல, இது சமூகத்தால், சமூகத்திற்காக நடத்தப்படும் திட்டம்.
மக்களின் பங்கேற்பு, திட்டம் தொடர்பானவர்கள் பங்கேற்பு, அரசியல் விருப்பம் மற்றும் வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்துதல் ஆகிய நான்கு தூண்களும் ஜல் ஜீவன் இயக்கத்தின் வெற்றியின் அடிப்படைகளாக உள்ளன. உள்ளூர் மக்கள், கிராம சபைகள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகம், மற்றும் பிற நிறுவனங்களுக்கு இதன் பிரச்சாரத்தில் முதன்மையான பங்கு வழங்கப்பட்டுள்ளது.
குடிநீர் பாதுகாப்பு திட்டங்களுக்கு கடந்த எட்டு ஆண்டுகளாக, எமது அரசு இடைவிடாது பணியாற்றி வருகிறது. நாட்டின் கட்டமைப்புக்கு நாம் அனைவரும், பணியாற்ற தீர்மானித்திருக்கிறோம். இதனால் தான், நிகழ்கால மற்றும் எதிர்கால சவால்களை நோக்கி நாம் பணியாற்றுகிறோம். நாட்டைப்பற்றிய அக்கறை இல்லாதவர்கள், நாட்டின் நிகழ்காலம் அல்லது எதிர்காலம் சீரழிக்கப்படுவதை பற்றியும் கவலைப்படாதவர்கள். இத்தகையவர்கள் நிச்சயம் பெரிதாக பேசுவார்கள். ஆனால் குடிநீருக்காக பெரிய தொலைநோக்குப் பார்வையோடு ஒரு போதும் பணிபுரிவதில்லை
பஞ்சாயத்துகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அனைத்து அமைச்சகங்களும் காட்டும் ஆர்வத்தில் பங்குதாரர்களின் பங்களிப்பு தெளிவாக உள்ளது. அதேபோல், கடந்த 7 தசாப்தங்களில் சாதித்ததை விட, வெறும் 7 ஆண்டுகளில் சாதித்திருப்பது அரசியல் உறுதிப்பாட்டை விளக்குகிறது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் போன்றவற்றுடன் ஒருங்கிணைப்பதில் வளங்களின் உகந்த பயன்பாடு பிரதிபலிக்கிறது. குழாய் நீரின் செறிவூட்டல் எந்தவொரு பாகுபாடும் ஏற்படுவதற்கான வாய்ப்பையும் நீக்கும். மக்கள் சக்தி, பெண்கள் சக்தி மற்றும் தொழில்நுட்பத்தின் சக்தி ஆகியவை ஜல் ஜீவன் இயக்கத்தை சிறப்பாக செயல்படுத்துகின்றன என்றார்.
இதையும் படிங்க: மத்திய அரசில் ஜூனியர் இன்ஜினியர் வேலை... என்னென்ன பணியிடங்கள்... எவ்வளவு சம்பளம்... முழுவிவரம் உள்ளே...