பீகார்: பீகாரில் கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில், அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி, போட்டியிட்ட 20 சட்டமன்றத் தொகுதிகளில் 5-ல் வெற்றி பெற்று தனது இருப்பை அழுத்தமாக பதிவு செய்திருந்தது.
இந்த நிலையில், ஏஐஎம்ஐஎம் எம்எல்ஏக்கள் 4 பேர் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தில் இணைந்துள்ளனர். இதனால் தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 80ஆக அதிகரித்துள்ளது. 243 சட்டமன்ற உறுப்பினர்களில், பாஜக எம்எல்ஏக்கள் 74 பேர், ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏக்கள் 43 பேர். தற்போது 80 எம்எல்ஏக்களுடன் ராஷ்ட்ரிய ஜனதா தளம், தனிப்பெரும் கட்சியாகவும், பிரதான எதிர்க்கட்சியாகவும் உருவெடுத்துள்ளது.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், புதிதாக இணைந்த முஹம்மது இசார் அஸ்பி, ஷாநவாஸ் ஆலம், சையத் ருக்னுதீன், அசார் நயீமி ஆகிய 4 எம்எல்ஏக்களுடன் தனது காரில் இன்று சட்டப்பேரவைக்கு வருகை தந்தார். தற்போது ஏஐஎம்ஐஎம்மில் ஒரு எம்எல்ஏ மட்டுமே இருப்பதால், அசாதுதீன் ஒவைசிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் ஏஐஎம்ஐஎம் 90 இடங்களில் போட்டியிட்ட நிலையில், ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. இந்த தோல்வியின் காரணமாகவே பீகாரில் 4 எம்எல்ஏக்கள் ராஷ்ட்ரிய ஜனதா தளத்திற்கு தாவிவிட்டதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையை நாய் தூக்கி சென்ற கொடூரம்