மும்பை: டிஆர்பி (தொலைக்காட்சி மதிப்பீடு புள்ளி) மோசடி தொடர்பாகக் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் விநியோகத் தலைவர் கன்ஷ்யம் சிங் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார் என்று மும்பை குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பும் நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெற்றுள்ள செல்வாக்கை அளவிடத் தொலைக்காட்சி மதிப்பீட்டுப் புள்ளிகளை (Television Rating Points) கணக்கிடப்படுகிறது.பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகமானால் அந்தப் புள்ளிகள் அதிகமாகும். புள்ளிகள் அதிகமானால் விளம்பரங்கள் அதிகமாக ஈர்க்கப்படும்.
இதன் மூலம் ஊடகத்தின் அதிக வருவாய் உயரும். எனவேதான் இவ்வரிசையில் அதிகமான புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடிக்க வேண்டும் என்ற போட்டியில் ஒவ்வொரு தனியார் சேனலும் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் பல்வேறு வகையில் முறைகேடுகள் நடப்பதாகத் தொடர்ந்து புகார்கள் வந்ததை அடுத்து, அதனைக் கண்காணிக்கும் பணியில் ஒலிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சிலுக்கு (பி.ஏ.ஆர்.சி) இறங்கியது.
அப்போது, மும்பையில் பிரபல ரிபப்ளிக் டிவி, ஃபக்த் மராத்தி, பாக்ஸ் சினிமா ஆகிய மூன்று சேனல்கள் டி.ஆர்.பி. தரவரிசையை உயர்த்திக் காட்டிட முறைகேடான வழிகளைக் கைக்கொண்டிருந்தது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக மும்பை பெருநகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் ரிபப்ளிக் டிவி, டிஆர்பி முறைகேடு தொடர்பாக, அந்நிறுவனத்தின் விநியோகத் தலைவர் மற்றும் உதவி துணைத் தலைவரான கன்ஷ்யம் சிங்கை மும்பை குற்றப்பிரிவு அலுவலர்கள் இன்று காலை 7.40 மணியளவில் அவரது இல்லத்தில் கைது செய்தனர். இந்த வழக்கில் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, (சிஐயு) இவருடன் சேர்ந்து இதுவரை 12 நபர்களை விசாரணைக்கு எடுத்துள்ளது.
சமீபத்தில் வடிவமைப்பு பொறியாளர் அன்வாய் நாயக் மற்றும் அவரது தாயாரைத் தற்கொலைக்குத் தள்ளியதாக வழக்கில் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியராக இருக்கும் அர்னாப் கோஸ்வாமி மராட்டியக் காவல் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.