நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை வெளியிட்ட அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சொத்துகள், யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் பண மோசடி நடந்ததாகப் புகார் எழுந்தது.
யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் எம்.பி., ராகுல்காந்தி பங்குதாரர்களாக உள்ளனர். இதுதொடர்பாக பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்து வரும் மத்திய அமலாக்கத்துறை, ஜூன் 8ஆம் தேதி ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், விசாரணைக்கு நேரில் ஆஜராவதிலிருந்து சோனியாகாந்தி விலக்கு கோரியிருந்தார். இதையடுத்து ஜூன் 23ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதேபோல் காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்திக்கும் ஜூன் 8ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், அவர் வெளிநாட்டில் இருப்பதாகக் கூறி ஆஜராவதிலிருந்து விலக்கு கேட்டார். இதையடுத்து ஜூன் 13ஆம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை அவகாசம் அளித்துள்ளது. அதன்படி, ராகுல்காந்தி நாளை விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.
இந்த நிலையில், நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்திக்கும், ராகுல் காந்திக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. நாளை ராகுல்காந்தி ஆஜராகும்போது, அனைத்து மாநிலங்களிலும் அமலாக்கத்துறை அலுவலகங்கள் முன்பு காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக லக்னோவில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் சச்சின் பைலட், "மத்திய அரசு தனது வெறுப்பு அரசியலின் மூலம் ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பியதன் மூலம் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்புவதை ஒடுக்க நினைக்கிறது. ஆனால், இதுபோன்ற ஏஜென்சிகளுக்கு முன்பு காங்கிரஸ் ஒருபோதும் தலை குனிந்தது இல்லை என்பதற்கு வரலாறுதான் சான்று" என்று கூறினார்.
இதுகுறித்து ராய்ப்பூரில் செய்தியாளர்களிடம் காங்கிரஸ் எம்.பி விவேக் தங்கா, "ஜனநாயக விரோத பாஜக அரசை எதிர்க்கும் நாள் வந்துவிட்டது. ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது" என்று கூறினார்.
சிம்லாவில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் நிரூபம், "அக்டோபர் 2ஆம் தேதி முதல் நாடு தழுவிய 'பாரத் ஜோடோ யாத்ரா' தொடங்குவதற்கான காங்கிரஸின் நடவடிக்கைகளை ஒடுக்கும் வகையிலேயே சம்மன்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால், நாங்கள் பயப்படவில்லை. இந்தப் புகாரில் எந்த உண்மையும் இல்லை" என்று கூறினார்.
சண்டிகரில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.பி., ரஞ்சீத் ரஞ்சன், "நாளை நாடு தழுவிய போராட்டம் நடத்துவதையொட்டி, 'சத்யமேவ ஜெயதே' என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் கண்டன பிரசாரம் செய்யப்படும். இந்த பாஜக சதியை முழு பலத்துடன் எதிர்கொள்வோம்" என்று கூறினார்.
இதையும் படிங்க:காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!