மும்பை: மும்பையில் உள்ள மூன்று ரயில் நிலையங்கள் மற்றும் நடிகர் அமிதாப் பச்சனின் பங்களாவில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காவலர்களுக்கு தகவல் அளித்தார்.
அதைத் தொடர்ந்து இந்த நான்கு இடங்களிலும் காவலர்கள் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். அதில் வெடிகுண்டுகள் உள்ளிட்ட எந்த அசம்பாவித பொருள்களும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதையடுத்து இந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரியவந்தது. அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து டிரைவர் உள்பட இருவரை காவலர்கள் கைதுசெய்துள்ளனர்.
இது குறித்து காவல்துறை தரப்பில், “மும்பை காவல்துறையின் முக்கிய கட்டுப்பாட்டு அறைக்கு வெள்ளிக்கிழமை (ஆக.6) இரவு 9.45 மணிக்கு அழைப்பு வந்தது, அதில் அழைப்பாளர் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் (சிஎஸ்எம்டி), பைகுல்லா, தாதர் ரயில் நிலையங்கள் மற்றும் ஜுஹுவில் உள்ள மெகாஸ்டார் அமிதாப் பச்சனின் பங்களாவில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக கூறினார்.
இந்த அழைப்பை தொடர்ந்து, ரயில்வே காவல்துறை (GRP), ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) மற்றும் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் குழு (BDDS), மோப்ப நாய் குழுக்கள் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் இந்த இடங்களுக்கு விரைந்து சென்று தேடுதல்களை மேற்கொண்டனர்.
சிஎஸ்எம்டி ஸ்டேஷனில், அனைத்து பிளாட்பாரங்கள், டிவிஷனல் ரயில்வே மேலாளர் (டிஆர்எம்) அலுவலகம், பார்க்கிங் இடங்கள் மற்றும் பிற அருகிலுள்ள பகுதிகள் பிடிஎஸ் மற்றும் மோப்ப நாய் குழுக்களின் உதவியுடன் தேடப்பட்டன.
பயங்கரவாத எதிர்ப்பு குழு (ATS), விரைவு பதில் குழுக்கள் (QRT), மரைன் டிரைவ் மற்றும் ஆசாத் மைதானம் உள்ளிட்ட சில உள்ளூர் காவல் நிலையங்களின் குழுக்களும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டன. ஆனால் பல மணிநேர தேடுதலுக்குப் பிறகும், சிஎஸ்எம்டி மற்றும் பிற மூன்று இடங்களில் சந்தேகத்திற்கிடமான எதுவும் காணப்படவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தல வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!