இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. தினந்தோறும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் புதிய கோவிட் வைரஸ் பரவ இருப்பதாகவும், அதன் தாக்கம் மே மாதத்தில் உச்சத்தில் இருக்கும் என ஏற்கனவே மத்திய அரசுக்குச் சுட்டிக்காட்டியிருந்தோம் என்றும் விஞ்ஞானிகள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய ஐ.ஐ.டி (ஹைதராபாத்) பேராசிரியர் டாக்டர் எம். வித்யாசாகர், " மார்ச் மாதம் கரோனாவின் வீரியம் அதிகரிக்கும் என்பது உறுதியானது. இதுகுறித்து மத்திய அரசுக்கும் சுட்டிக்காட்டினோம். இருப்பினும், தரவு பகுப்பாய்வு சரியாக இல்லாததால், பாதிப்பின் எண்ணிக்கையைக் கணிக்க முடியவில்லை. பல திட்டங்களை வகுத்துள்ளதாக மத்திய அரசு தரப்பில் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த சில வார கரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்க்கையில், அந்த திட்டங்கள் போதுமானதாக இல்லை என்பது தெரிகிறது எனத் தெரிவித்தார்.
அதே போல, ஏப்ரல் மாதம் நடத்திய ஐ.ஐ.டி கான்பூர் ஆய்வில், கரோனா அலை மே 8க்கு பிறகு அதிகரிக்கும் என்றும் மே 14 முதல் மே 18 வரை 38 முதல் 44 லட்சம் பேர் சிகிச்சை பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. வைரஸ் மாற்றத்தைக் கண்டறிய நாடு முழுவதும் உள்ள 10 தேசிய ஆய்வகங்களில் பணி நடைபெறுகிறது.
முதலில் பி.1.617 என்ற வைரஸ் பிப்ரவரி மாதத்தில் கண்டறியப்பட்டது. தற்போது, E484Q , L452R என்கிற உருமாற்றம் பெற்ற கரோனா வைரசுகள் பரவி வருகிறது. இவை மனித உயிரணுக்குள் எளிதில் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.