டெல்லி: இந்திய ராணுவத்தில் ஆள் சேர்ப்புக்காக மத்திய அரசால் சில தினங்களுக்கு முன் அக்னிபாத் எனும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கான முதல் பயிற்சி வரும் டிசம்பர் முதல் ஆரம்பமாகும் என இந்திய ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே அறிவித்துள்ளார். மேலும் இந்த பயிற்சி காலம் முடிந்ததும் 2023 ஆம் ஆண்டின் மத்தியில் பணியில் வீரர்கள் அமர்த்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனவால் கடந்த 2 வருடங்களில் வேலை இல்லாமல் தவித்த இளைஞர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் வேலை வாய்ப்பு உருவாகும் என ராணுவம் வெளியிட்ட தகவலில் குறிப்பிடப்பட்டிருந்தது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட அக்னிபாத் ஆட்சேர்ப்புத் திட்டம், நான்கு வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ராணுவ அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்ய முன்மொழிகிறது.
அக்னிபாத் திட்டத்தின் மூலம் உற்சாகமான மற்றும் ஆர்வமிக்க இளைஞர்களை இதில் இணைக்க முடியும் எனவும், இதற்கான ஆட்சேர்ப்பு பட்டியல் விரைவில் வெளியாகும் எனவும் இந்திய ராணுவ தலைமை அதிகாரி ஜெனரல் மனோஜ் பாண்டே கூறினார். மேலும் இந்த புதிய திட்டம் மூலம் இந்திய ராணுவத்தில் அதிக உயரத்தை எட்ட முடியும் எனத் தெரிவித்தார். நாட்டின் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் இத்திட்டத்திற்கு எதிராக போராடி வரும் நிலையில் இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:அக்னிபாத் திட்டத்திற்கு இளைஞர்கள் கடும் எதிர்ப்பு - தீவிரமடையும் போராட்டம்