மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் நிலவி வரும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் நாளை நடைபெறும் பெரும்பான்மையை நிறுத்தக் கோரி சிவசேனா உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது. இந்த மனு மீதான விசாரணை இன்று மாலை நடைபெறுகிறது.
மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷியாரி நாளை சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்குத் தயாராகுமாறு முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதியிருந்தார். மகாராஷ்டிர எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக தலைவருமான தேவேந்திர ஃபட்னாவிஸ், நேற்று(ஜூன்28) ஆளுநரைச் சந்தித்து, மாநிலத்தில் நிலவும் அரசியல் குழப்ப நிலையை கருத்தில் கொண்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு கோரியிருந்தார். இதனைத் தொடர்ந்து ஆளுநர் முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
முன்னதாக, மகாராஷ்டிரா ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை அணுகுவோம் என்று சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில் "எங்கள் 16 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் இது சட்டத்திற்கு புறம்பானது. கவர்னர் இந்த சிக்கலான சூழ்நிலைக்காக காத்திருந்தார். எங்களுக்கு உச்சநீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளது என ராவுத் கூறினார்.
மேலும், இதே கருத்தை காங்கிரஸ் தலைவர் பிருத்விராஜ் சவான் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். மேலும் ஆளுநர் பிஎஸ் கோஷ்யாரியின் கடிதத்தை எதிர்த்து மகாராஷ்டிரா அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்," என்று அவர் கூறினார்.
சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி கூறுகையில், 16 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கை ஜூலை 11 ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளதால், ஜூன் 30 ஆம் தேதி முதல்வரை நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளுமாறு கூறுவது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாகும் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:மகாராஷ்டிராவில் ஆட்சி தப்புமா? - பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவு