பிணை கேட்டு 'அட்டாக்' பாண்டி மனு: சிபிஐ பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு - தினகரன் அலுவலகம் தாக்கப்பட்ட விவகாரம்ட
டெல்லி: தினகரன் அலுவலகம் தாக்கப்பட்ட விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட அட்டாக் பாண்டி, பிணை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ள நிலையில், இது தொடர்பாக சிபிஐ பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினகரன் அலுவலகம் தாக்கப்பட்ட விவகாரத்தில் அட்டாக் பாண்டி என்ற ரவுடிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் பிணை கேட்டு அவர் மனு தாக்கல்செய்திருந்தார். இந்நிலையில், இது தொடர்பாக சிபிஐ இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, நீதிமன்றத்தில் பாண்டி சார்பாக முன்னிலையான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா, கடந்த இரண்டு ஆண்டுகளாக பாண்டி சிறைத் தண்டனை அனுபவித்துவருவதாக நீதிபதிகளிடம் தெரிவித்தார். சிபிஐயிடம் கலந்து ஆலோசிக்காமல் பிணை வழங்க முடியாது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தெரிவித்தார்.
கடந்த 2007ஆம் ஆண்டு, மதுரையில் உள்ள தினகரன் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது மூவர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அடுத்த திமுக தலைவராக ஸ்டாலின் வர மக்கள் விரும்புவதாக தினகரன் நாளிதழ் கருத்துக்கணிப்பு வெளியிட்டது.
இதன் காரணமாக, அழகிரிக்கு நெருக்கமான பாண்டி, தினகரன் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. கடந்த 2009ஆம் ஆண்டு, போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி பாண்டி உள்பட 17 பேரை கீழமை நீதிமன்றம் விடுதலைசெய்தது. இதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல்செய்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என். பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, பாண்டி உள்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
TAGGED:
'அட்டாக்' பாண்டி