வேலூர்: காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகனுக்குச் சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் இரண்டு நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். இதில், அமைச்சர் வீட்டில் எந்த ஆவணங்களும் கிடக்காத நிலையில், கல்லூரியில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக அமலாக்கத்துறை வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.
காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான கதிர் ஆனந்த் வீட்டில், அவரது ஒப்புதல் கடிதத்தின் அடிப்படையில், நேற்று (ஜனவரி 3) வெள்ளிக்கிழமை அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
அமைச்சர் துரைமுருகன் வீடு உள்பட 3 இடங்களில் 5 மணி நேரத்திற்கு மேலாக 10 கார்களில் வந்த 35 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்த நிலையில், சோதனைக்கு இடையே அவர்கள் சுத்தியல், உளி, பெரிய கடப்பாரை ஆகியவற்றை கொண்டு சென்றனர்.
இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்று (ஜனவரி 04) சனிக்கிழமை அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்ட நிலையில், அமைச்சர் வீட்டில் எந்த ஒரு ஆவணமும், பணமும் கைப்பற்றப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.
அதேபோல், வேலூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு துறை அமைப்பாளர் பூஞ்சோலை சீனிவாசன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான சிமெண்ட் குடோனிலும் நேற்று முதல் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. இந்த சோதனை முடிவில் முக்கிய ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத பணத்தை அதிகாரிகள் கைப்பற்றியதாக அலுவலக வட்டாரங்கள் தகவல் வழங்கியுள்ளன.
கிங்ஸ்டன் கல்லூரி சோதனை:
எம்.பி கதிர் ஆனந்துக்குச் சொந்தமான காட்பாடி கிறிஸ்டியன் பேட்டையில் உள்ள கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியிலும், இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட நிலையில், கணக்கில் வராத பணமும், ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
அங்கு சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கல்லூரியில் சோதனை நடந்துவரும் நிலையில், மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்தின் வழக்கறிஞர்கள் குழு உள்ளே செல்ல அனுமதி கேட்டனர். அவர்கள் ஒரு மின்னஞ்சலை காண்பித்து உள்ளே செல்ல அனுமதி வழங்கும்படி மத்திய ரிசர்வ் படையிடம் முறையிடுவதும், அவர்களுக்கு அனுமதி மறுப்பதும் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: கிங்ஸ்டன் கல்லூரியில் 2வது நாளாக தொடரும் சோதனை: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்?
கல்லூரியில் சோதனை நடைபெற்று வருவதால், காலையில் கல்லூரிக்கு வந்த மாணவர்கள் மற்றும் ஊழியர்களிடம் அடையாள அட்டை காண்பித்த பிறகு உள்ளே செல்ல வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, கல்லூரிக்குள் இருந்து வெளியில் வரும் பேருந்துகளை மத்திய துணை ராணுவப் படையினர் சோதனை நடத்திய பின்னரே வெளியே செல்ல அனுமதிக்கின்றனர்.
36 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்த சோதனை :
இதற்கிடையில், இன்று பகல் 2.35 மணிக்கு வழக்கறிஞர் பாலாஜி கல்லூரிக்கு செல்ல வேண்டும் என மத்திய துணை ராணுவ படையினரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், சோதனை நடைபெறுவதால் உள்ளே செல்ல அனுமதி இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளனர். நேற்று பிற்பகல் 2:45 மணிக்கு தொடங்கிய அமலக்கத்துறை சோதனை தொடர்ந்து இன்று மாலை 5 மணியை கடந்தும், 36 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், காட்பாடி கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி வளாகத்தில் இருந்து, இன்று மாலை 6.40 மணியளவில் ஒரு கார் வெளியே சென்றுள்ளது. இதில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சிலர் இருந்ததாக செய்தியாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், கல்லூரி வளாகத்தில் சோதனை முடிவு பெற்று அதிகாரிகள் வெளியில் செல்கின்றனரா என்ற சந்தேகம் எழுந்து, அந்த இடத்தில் சற்று சலசலப்பான சூழல் நிலவுகிறது.