டெல்லி : அமலாக்கத் துறை இயக்குனர் சஞ்சய் மிஸ்ராவின் பணிக் காலத்தை செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
அமலாக்கத்துறை இயக்குனரின் பணிக் காலத்தை செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய், சாதாரண சூழ்நிலையாக இருந்தால் அமலாக்கத்துறை இயக்குனரின் பணிக் காலம் நீட்டிக்கப்பட்டு இருக்காது என்றும் மிகப் பெரிய தேச நலன் என மத்திய அரசு வலியுறுத்தியதை அடுத்து பணி நீட்டிப்பு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
மத்திய புலனாய்வு விசாரணை அமைப்பான அமலாக்கத்துறையின் இயக்குனராக சஞ்சய் குமார் மிஸ்ரா கடந்த 2018ஆம் ஆண்டு இரண்டு ஆண்டு கால அடிப்படையில் பணி அமர்த்தப்பட்டார். இந்நிலையில், அவரது பணிக் காலம் மூன்று முறை நீட்டிக்கப்பட்டு தற்போது வரை அவர் அமலாக்கத்துறையின் இயக்குனராக பணியாற்றி வருகிறார்.
2020ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பணிக் காலம் நிறைவு பெற்ற நிலையில், மேலும் ஒராண்டுக்கு பணி நீட்டிப்பு செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இந்த பணி நீட்டிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருந்து நிலையில், அதிலிருந்து அவரது பணிக்காலம் இரண்டு மாதங்களில் முடிவடைய இருந்ததால் பணி நீட்டிப்புக்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதனிடையே கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் தேதி மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணைய சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது. அதன்படி அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளின் தலைவர்களை அவர்களது கட்டாய இரண்டு ஆண்டுகள் பணிக் காலத்திற்கு மேல், கூடுதலாக 3 ஆண்டுகள் வரை பணி நீட்டிப்பு செய்ய அனுமதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
இதற்கு உச்ச நீதிமன்றமும் அனுமதி அளித்தது. இந்த சட்டத்தின் அடிப்படையில் அமலாக்கத்துறை இயக்குனர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பணிக் காலத்தை மீண்டும் நீடித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இந்நிலையில், மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை இயக்குனர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பணிக் காலத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
சஞ்சய் குமார் மிஸ்ராவின் பணிக் காலத்தை நீட்டிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஒரு அதிகாரி இல்லாமல் போனால் ஒட்டுமொத்த அமலாக்கத் துறையும் செயலழிந்து போய்விடுமா என்று கேள்வி எழுப்பினர். அமலாக்கத்துறை இயக்குனர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பணி நீட்டிப்பு சட்டவிரோதமானது என்றும் ஜூலை மாதம் 31ஆம் தேதி வரை அவர் பணியில் நீடிக்கலாம் என்றும் கூறி தீர்ப்பு வழங்கினர்.
இந்நிலையில், அக்டோபர் 15ஆம் தேதி வரை அமலாக்கத்துறை தலைவராக சஞ்சய் குமார் மிஸ்ரா நீடிக்க அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனு மீதான விசாரணையை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இன்று விசாரணை நடத்தியது.
இதில் நாட்டில் முக்கியமான பண மோசடி தொடர்பான வழக்குகள் மீதான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நிதி நடவடிக்கை பணிக்குழுவின் பரிந்துரையை ஏற்று சஞ்சய் குமார் மிஸ்ராவின் பணிக் காலத்தை நீட்டிக்க உள்ளதாகவும், இதில் மிகப் பெரிய தேச நலன் இருப்பதாகவும் மத்திய அரசு தரப்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
இதையடுத்து அமலாக்கத் துறை இயக்குனராக சஞ்சய் குமார் மிஸ்ரா செப்டம்பர் 15ஆம் தேதி வரை பணியில் நீடிக்க அனுமதித்து நீதிபதிகள் பி.ஆர். கவாய், விக்ரம் நாத், சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.
இதையும் படிங்க : காங்கிரசுக்கு ஆட்டம் காட்டும் ரெட் டைரி... சூட்சமம் உடைத்த பிரதமர் மோடி!