டெல்லி: டெல்லி கல்வித்துறை சார்பில் வகுப்பறைகள் கட்டுவதில் ஊழல் நடந்துள்ளதாகவும், இதில் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு முக்கிய பங்கு இருப்பதாகவும், அவர் சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாகவும் பாஜகவினர் குற்றம் சாட்டினர்.
இந்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் பரப்பப்பட்டவை என்றும் கூறி, மணீஷ் சிசோடியா கடந்த 2019ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
பாஜக எம்பிக்கள் மனோஜ் திவாரி, ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ், பிரவேஷ் வர்மா, எம்எல்ஏக்கள் மஞ்சிந்தர் சிங் சிர்சா, விஜேந்தர் குப்தா மற்றும் பாஜக செய்தித் தொடர்பாளர் ஹரிஷ் குரானா உள்ளிட்டோர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பாஜக எம்பி மனோஜ் திவாரி, எம்எல்ஏ விஜேந்தர் குப்தா ஆகியோருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, மனோஜ் திவாரி மற்றும் விஜேந்திர குப்தா இருவரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மேல்முறையீட்டு மனுக்கள் இன்று(அக்.17) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த நீதிமன்றம், மனோஜ் திவாரியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் குப்தாவின் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
சட்ட கமிஷன் அறிக்கையின் விபரங்கள் சரியாக குறிப்பிடப்படவில்லை என்ற அடிப்படையில் விஜேந்தர் குப்தாவின் மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக் கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இதையும் படிங்க:என்னை கைது செய்ய சிபிஐ திட்டமிட்டுள்ளது - மணீஷ் சிசோடியா