டெல்லி: கடந்த 2012ஆம் ஆண்டு, டெல்லி சாவ்லா பகுதியிலிருந்து 19 வயது இளம்பெண் கடத்தப்பட்டார். மூன்று நாட்களுக்குப் பிறகு ஹரியானா மாநிலத்தில் ரேவாரி பகுதியில் அவரது உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
இதுதொடர்பான விசாரணையில் ராகுல்(27), ரவி(23), வினோத்(23) ஆகிய மூன்று பேர் இளம்பெண்ணை கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததும், கண்ணாடி பாட்டில்கள், உலோகப் பொருட்கள் உள்ளிட்டவற்றால் கொடூரமாக தாக்கியதும் தெரியவந்தது.
டெல்லியில் தங்கி பணிபுரிந்த அந்த பெண், உத்தரகாண்ட் மாநிலத்தைச்சேர்ந்தவர் என்றும், பணி முடிந்து திரும்பும்போது கடத்தப்பட்டதும் தெரியவந்தது. இந்தப் பாலியல் வன்கொடுமை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதையடுத்து அந்த மூவரும் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், மூவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மூவரும் மிருகங்கள் என்றும், இதுபோன்ற தாக்குதல் மிகவும் அரிது என்றும் நீதிமன்றம் கடுமையாக சாடியது. விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
பின்னர் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மூவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனு நேற்று(நவ.7) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.
இதையும் படிங்க: பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10% இடஒதுக்கீடு செல்லும்; உச்ச நீதிமன்றம்