கர்நாடக மாநிலம் பெங்களூவில் இருந்து 60 கி.மீ தொலைவில் விஸ்ட்ரான் (Wistron) கார்ப்பரேஷன் என்ற தைவான் நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7, லெனோவா, மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் பயோடெக் சாதனங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலையில் சுமார் 2 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
இந்நிலையில் இந்நிறுவனம் ஊழியர்களுக்கு பல மாதங்களாக முறையாக ஊதியம் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் நீண்ட நாட்களாகவே நிறுவனத்தின் மீது ஊழியர்கள் அதிருப்தியில் இருந்துள்ளனர். இச்சூழலில் நேற்று இரவு ஷிப்டிற்கு வந்த ஊழியர்கள் பணியை முடிந்தபின்பு, தொழிற்சாலையை அடித்து நொறுக்கி தங்கள் கோபத்தை தணித்துள்ளனர். நிறுவனத்தில் இருந்த உபகரணங்கள், உற்பத்தி இயந்திரங்கள், வாகனங்கள் உள்ளிட்டவற்றை கட்டைகளைக் கொண்டு தாக்கியுள்ளனர்.
கண்ணாடி கதவுகள் உள்ளிட்டவற்றையும் சுக்கு நாறாக அடித்து உடைத்தனர். நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ஒன்றாக சேர்ந்து நிறுவனத்தை அடித்து நொறுக்கியதில் அந்த இடமே போர்க்களம் போன்று காட்சியளித்தது. மேலும் நிறுவனத்தின் பெயர் பலகை, வாகனங்களுக்கும் தீ வைத்தனர்.
இதுபற்றி தகவலறிந்து கோலார் மாவட்டத்தில் இருந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள துணை முதலமைச்சர் அஸ்வத் நாராயண், " சட்டத்தை யாரும் தங்கள் கையில் எடுத்துக்கொள்ள கூடாது. இதுபோன்ற வன்முறையில் ஈடுபடாமல் பிரச்னைகளைத் தீர்க்க பல வழிகள் உள்ளன” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: போனஸ் வழங்காததை கண்டித்து டான்டீ அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை