புதுச்சேரி: முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பாண்லே(Ponlait) நிறுவனத்தில் பல ஆண்டுகளாகக் குறைந்த சம்பளத்தில் பணியாற்றியவர்களுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது தொகுப்பூதியமாக மாதம் ரூ.7,000 பெறும் தற்காலிக ஊழியர்களின் சம்பளம் ரூ.15,000 உயர்த்தப்பட்டுள்ளது.
ஐந்தாண்டுகளுக்கும் மேல் பணி செய்து, நாள் ஒன்றுக்கு ரூ.176 சம்பளம் பெறும் தற்காலிக ஊழியர்களின் சம்பளம் ரூ.430 ஆக உயர்த்தப்படும். இதன் மூலம் அவர்களுக்கு மாத சம்பளம் ரூ.13,000 கிடைக்கும்.
ஐந்தாண்டுகளுக்கும் குறைவாக பணி செய்து, நாள் ஒன்றுக்கு ரூ.176 சம்பளம் பெறும் தற்காலிக ஊழியர்கள் இனி ரூ.330 சம்பளம் பெறுவார்கள். இதன் மூலம் அவர்களின் மாத சம்பளம் ரூ.10,000 உயரும்.
இந்த உயர்த்தப்பட்ட சம்பளமானது அவர்களுக்கு நவம்பர் ஒன்றாம் தேதி முதல் வழங்கப்படும். இதன்மூலம் தொகுப்பூதியம் பெறும் 18 ஊழியர்கள், தினக்கூலி பெறும் 247 ஊழியர்களும் பயன்பெறுவர். இதன் மூலம் பாண்லே நிறுவனத்துக்கு ரூ.25 லட்சம் கூடுதல் செலவு ஏற்படும்.
தினக்கூலி அடிப்படையில் பணியாற்றிய தற்காலிக ஊழியர்களுக்கு நவம்பர் மாதம் முதல் மாதம் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய தற்காலிக விடுப்பு வழங்கப்படும். மரணமடைந்த ஊழியர்களின் குடும்ப நலனை கருத்தில்கொண்டு அவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் முதல்கட்டமாக ஆறு பேருக்கு பணி வழங்கப்படும். மீதமுள்ளவர்கள் வாரிசு சான்றிதழ் அளித்தபின் அவர்களுக்கும் பணி வழங்கப்படும்.
பாண்லே நிறுவனத்துக்கு 2020-21-ம் ஆண்டில் பால் வழங்கிய 101 கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு அவர்கள் வழங்கிய பாலுக்கான மொத்த மதிப்புக்கு, ஒரு ரூபாய்க்கு 5 பைசா வீதம் விலை வித்தியாசத்தொகை தீபாவளி பண்டிகைக்கு முன்னர் வழங்கப்படும்.
இதனால் பாண்லே நிறுவனத்துக்கு கூடுதலாக ரூ.3.45 கோடி செலவாகும். கிராமப்புறங்களில் உள்ள சுமார் ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் இதன்மூலம் பயன் பெறுவர். பாண்லே முகவர்களுக்கு தீபாவளி பண்டிகை முன்பணமாக ரூ.12,000 வீதம் 100 பேருக்கு வழங்கப்படும். இதனால் 215 முகவர்கள் பயன்பெறுவர்" என்றார்.
இதையும் படிங்க: ரஜினிகாந்த் உறவினர் மீது பெண் புகார்!