திருவனந்தபுரம்: கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோயிலில் கார்த்திகை சீசன் தொடங்கிவிட்டது. இந்த சீசன் தொடங்கிய 10 நாள்களில் ரூ.52 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக சபரிமலை தேவஸ்தானம் போர்டு தலைவர் கே.அனந்தகோபன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அனந்தகோபன் கூறுகையில், அய்யப்பன் கோயிலுக்கு ரூ. 2.58 கோடி அப்பம் விற்பனை மூலமும், ரூ. 23.57 கோடி அரவண பாயாசம் (பஞ்சாமிர்தம்) விற்பனை மூலமும் கிடைத்துள்ளது. அதேபோல உண்டியல் காணிக்கையாக 12.73 கோடியும், நன்கொடையாக ரூ.14 கோடியும் கிடைத்துள்ளது.
அந்த வகையில், மொத்தமாக 52 கோடியே 88 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. கடந்தாண்டு கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வருவாய் ரூ.9.92 கோடியாக இருந்தது. இந்த எண்ணிக்கை இந்தாண்டு 5 மாடங்காக உயர்ந்துள்ளது. இந்த வருவாயின் பெரும் தொகை கார்த்திகை சீசன் ஏற்பாடுகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளது. இப்போது கோயிலுக்கு செல்லும் நான்கு வழிகளும் திறக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் தங்களுக்கு விருப்பமான வழிகளில் செல்லலாம். கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது ஸ்பாட் புக்கிங் மூலமாகவோ தரிசனத்தைப் பதிவு செய்யலாம் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருக்கார்த்திகை தீபத் திருவிழா: அண்ணாமலையர் கோயிலில் சிறப்பு வழிபாடு...