சபரிமலை(கேரளா): இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கரோனா கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் நாளை முதல் சபரிமலையில் மண்டல காலம் தொடங்குகிறது. இதையொட்டி இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை சந்நிதானத்தினை, பொறுப்பில் உள்ள மேல்சாந்தியான பரமேஸ்வரன் நம்பூதிரி திறந்து தீபாராதனை காட்டினார். இந்நிகழ்வில் தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலை வகித்தார்.
பின்னர் சபரிமலை புதிய மேல்சாந்தியாக ஜெயராமன் நம்பூதிரியும், மாளிகைப்புரம் மேல்சாந்தியாக ஹரிஹரன் நம்பூதிரியும் இருமுடி கட்டி, பதினெட்டாம்படி வழி ஏறி வந்து ஐயப்பனை தரிசனம் செய்தனர். சபரிமலையில் நாளை காலை தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
மண்டல காலம் தொடங்கும் கார்த்திகை 1-ம் தேதியான நாளை (நவ.17) இந்த புதிய மேல்சாந்திகள், சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் கோயில் நடையைத் திறந்து பூஜைகளை நடத்துவார்கள். அடுத்த ஒரு ஆண்டிற்கு இவர்கள் தலைமையில் தான் சபரிமலையில் முக்கிய பூஜைகள் நடைபெறும்.
பிரசித்திபெற்ற மண்டல பூஜை டிசம்பர் 27-ம் தேதி நடைபெறுகிறது. அன்று இரவு சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். பின்னர், மீண்டும் மகரவிளக்கு கால பூஜைகளுக்காக டிசம்பர் 30-ம் தேதி மாலை நடை திறக்கப்படும். இந்த முறை தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாதவர்களுக்காக நிலக்கல், கொட்டரக்கரா, பந்தளம், திருவனந்தபுரம், குமுளி உள்பட 13 இடங்களில் உடனடி முன்பதிவு வசதியும் தொடங்கப்பட்டுள்ளது. சபரிமலை சந்நிதானத்தில் பக்தர்கள் தங்கும் அறைகளுக்கான முன்பதிவும் இன்று முதல் தொடங்குகிறது. நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் புல்மேடு மற்றும் கரிமலை பாதை திறக்கப்பட்டுள்ளது.
இன்று நடை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர். மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் சிறப்புப்பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பக்தர்கள் பாதுகாப்பிற்காக, பாதுகாப்புப்பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். நாளை முதல் பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பரிமள ரங்கநாதர் கோயிலில் துலா உற்சவத்தையொட்டி திருத்தேரோட்டம்!