கீவ் : உக்ரைனின் பக்முத் நகரை ரஷ்ய ராணுவம் ஆதரவுபெற்ற வாக்னர் தனியார் ராணுவக் குழு கைப்பற்றியதாக ரஷ்யா பாதுகாப்புத் துறை தெரிவித்து உள்ளது. வாக்னர் ராணுவக் குழுவின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோசன் (Yevgeny Prigozhin) பகுமுத நகரம் முழுவதும் ரஷ்யப் படையின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததாக தனது டெலிகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு உள்ளார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் ரஷ்யா ஈடுபட்டது. ராணுவ நடவடிக்கை தொடங்கி ஓராண்டு கடந்த நிலையிலும், போர் முடிவுக்கு வரவில்லை. தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரஷ்ய ராணுவத்தினர் வீசிய குண்டு மழை, உக்ரைனின் உள்கட்டமைப்புகளை உருக்குலைத்தன.
ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா, மேற்கு நாடுகள், ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. அமெரிக்கா, ஐரோப்பியா நாடுகள், நேரடியாகவும், மறைமுகமாகவும் உக்ரைனுக்கு ராணுவம் மற்றும் மனிதாபிமான உதவிகளை செய்து வருகின்றன. ரஷ்யாவின் போரால், லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் சொந்த வீடுகளை இழந்து அகதிகளாக உள்நாட்டிலும், அண்டை நாடுகளிலும் தஞ்சம் புகுந்தனர்.
சீனா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவுக்கு உதவுவதாக தகவல்கள் கூறப்படுகின்றன. ஈரான் கொடுத்த அதிநவீன ட்ரோன்களை கொண்டு உக்ரைன் ராணுவத்திற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொடுத்த ராணுவத் தளவாடங்களை ரஷ்யா அழித்ததாக சொல்லப்படுகின்றன. இந்நிலையில், உக்ரைனில் உள்ள பக்முத் நகரை கைப்பற்றியதாக ரஷ்ய ராணுவத்தின் கூலிப் படை அமைப்பான வாக்னர் தெரிவித்து உள்ளது.
ரஷ்ய அதிபர் புதினுக்கு நெருக்கமான தொழிலதிபர் யெவ்ஜெனி பிரிகோசன் (Yevgeny Prigozhin ) தொடங்கிய கூலிப் படை அமைப்புதான், வாக்னர். ரஷ்ய அதிபருக்கு நெருக்கமாக இருந்தது உள்ளிட்ட காரணத்திற்காக யெவ்ஜெனி பிரிகோசன் மீது உக்ரைன், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பல்வேறு தடைகளை அறிவித்தன.
ரஷ்ய ராணுவத்திற்கு துணையாக வாக்னர் கூலிப்படை அமைப்பும் பல்வேறு ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தன. இந்நிலையில் கிழக்கு உக்ரைனில் உள்ள பக்முத் நகரை கைப்பற்றியதாக ரஷ்ய பாதுகாப்புத் துறை தெரிவித்து உள்ளது. ஏறத்தாழ 8 மாத தொடர் போருக்குப் பின், பக்முத் நகரம் முழுமையாக தங்கள் வசமாக்கி உள்ளதாக ரஷ்யா தெரிவித்து உள்ளது.
பக்முத் நகரை கைப்பற்றியதை அடுத்து அந்நகருக்கு புராதன ரஷ்ய பெயரான ஆர்டியோமோவ்ஸ்க் (Artyomovsk) என ரஷ்ய பாதுகாப்புத் துறை பெயர் சூட்டியது. ஆர்டியோமோவ்ஸ்க் நகரை கைப்பற்றிய வாக்னர் குழுவுக்கு ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். கிழக்கு உக்ரைனில், ரஷ்யாவுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி பக்முத் நகரம் எனக் கூறப்படுகிறது.
இதன் மூலம் தலைநகர் கீவ் மீதான நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்யாவுக்கு கூடுதல் வாய்ப்பாகும் எனக் கூறப்படுகிறது. அதேநேரம் பக்முத் நகரை ரஷ்யா கைப்பற்றியது குறித்து உக்ரைன் தரப்பில் இருந்து எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. பக்முத் நகரை கைப்பற்றியதாக ரஷ்யாவின் அறிவிப்புக்கு உக்ரைன் எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
இதையும் படிங்க : மிக்-21 போர் விமானம் தற்காலிக நிறுத்தம்