தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் சிலர் ஆன்லைன் முதலீடு நிறுவனத்தை தொடங்கினர். பிரத்யேகமாக அதற்காகவே இணையதளம் ஒன்றை உருவாக்கி, அதில் நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் என வெளிநாட்டைச் சேர்ந்தவர்களின் புகைப்படங்களை, அதில் பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து முதலீடுகளைப் பெறுவதற்காக, இது பிரிட்டனை தலைமையிடமாக வைத்து செயல்படும் பன்னாட்டு நிறுவனம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் வாடிக்கையாளர் ஒருவரிடமிருந்து 10 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை ஐந்து வகைகளாக முதலீட்டுத் திட்டங்களைப் பெற்றுள்ளனர். இதனால் சுமார் 2,500க்கும் மேற்பட்டோர், இந்நிறுவனத்தில் 7 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்துள்ளனர். இந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கிய இந்த ஆன்லைன் முதலீட்டு நிறுவனம் வெறும் 2 மாதங்கள் மட்டுமே நீடித்தது. பிறகு இவர்கள் நிறுவனத்தை எந்த ஒரு முன் அறிவிப்புமின்றி மூடியதால், இந்நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து இந்நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் தாமாக முன்வந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்த காவல் துறையினர், விசாகப்பட்டினத்தில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேரைக் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை அலேக்கா தூக்கிச் சென்ற பாஜக தொண்டர்!