சென்னை: இலங்கையிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு ஏா் இந்தியா மற்றும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்களில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது இலங்கையை சேர்ந்த இரு பெண் பயணிகள் தனித்தனி விமானங்களில் வந்தனர். அவர்கள் இருவரும் தங்களிடம் சுங்கத்தீர்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறிவிட்டு கிரீன் சேனல் வழியாக வெளியில் சென்று கொண்டு இருந்தனர்.
ஆனால் சுங்க அதிகாரிகளுக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. எனவே பெண் சுங்க அதிகாரிகள் அந்த இரண்டு இலங்கைப் பெண் பயணிகளையும் நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல் அளித்தனர். இதையடுத்து 2 பெண்களையும் சுங்க அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அவர்களை தனி அறைக்கு அழைத்து சென்று முழுமையாக பரிசோதித்தனர். அப்போது அவர்களுடைய உள்ளாடைகளுக்குள், தங்க பசையை மறைத்து வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர். இரண்டு பேரின் உள்ளாடைகளுக்குள் ஒரு கிலோ 20 கிராம் (1.02 கிலோ) தங்க பசை இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 47 லட்சத்து 25 ஆயிரம் (ரூ.47.25 லட்சம்).
இதையடுத்து சுங்க அதிகாரிகள்,இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தங்கப்பசையை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களை விசாரித்த போது, அவர்கள் இலங்கையைச் சேர்ந்த தங்கம் கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது.
இதையும் படிங்க: சென்னை மாநகராட்சியில் உருவாக்கப்பட்ட சாலையோர விற்பனைக் குழுக்கள் கலைப்பு எனத் தகவல்