உத்தரப் பிரதேசம்: நேற்று முன் தினம் (ஆக.21) வயது மூப்பு காரணமாக முன்னாள் இமாச்சலப் பிரதேச ஆளுநரும், உத்தரப் பிரதேசத்தில் இரண்டு முறை முதலமைச்சராக பதவி வகித்தவருமான கல்யாண் சிங் உயிரிழந்தார்.
பாஜகவைச் சேர்ந்த கல்யாண் சிங், சிறு வயது முதலே இந்துத்துவ கொள்கைகளை ஏற்று, தன்னை ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இணைத்துக் கொண்டார். பின்னர் அரசியலில் களமிறங்கிய இவர், ஜன சங்கம், ஜனதா கட்சி, பாஜக என பயணத்தைத் தொடர்ந்தார்.
பாபர் மசூதி இடிப்பு சம்பவம்
நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சர்ச்சைக்குரிய பாபர் மசூதி இடிப்பு சம்பவம் இவர் காலத்தில்தான் நடைபெற்றது. 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி அயோத்தியில் ஆயிரக்கணக்கான 'கர சேவகர்கள்' கூடியிருந்தபோது, கல்யாண் சிங் உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இதற்கு தார்மீகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டு கல்யாண் சிங் பதவியை ராஜினாமா செய்தார். இருப்பினும், பாபர் மசூதி இடிப்பு சம்பவத்துக்கு ஒருபோதும் அவர் வருத்தப்படவில்லை, அதைப் பற்றி பெருமிதம் கொண்டார்.
ராமர் கோயில் குறித்து கல்யாண் சிங்
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தன் வாழ்க்கையின் முக்கியத் தருணம் என்றே கல்யாண் சிங் எப்போதும் கூறிவந்தார். கடந்த ஆண்டு (2020) ஆகஸ்ட் 5ஆம் தேதி அயோத்தியில் நடந்த ராமர் கோயில் பூமி பூஜையிலும் கல்யாண் சிங் கலந்துகொண்டார்.
அப்போது, “இது எனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள்களில் ஒன்றாகும். அயோத்தியில் ஒரு பெரிய ராமரை பார்ப்பது எனது வாழ்நாள் கனவாக இருந்தது. இன்று அது நிறைவேற்றப்பட்டுள்ளது. பாபர் மசூதி இடிக்கப்பட்டபோதும் என் அரசாங்கம் வீழ்த்தப்பட்டபோதும் நான் ஒருபோதும் வருத்தம் கொள்ளவில்லை” என்று கூறினார்.
ராமஜென்ம பூமி செல்லும் சாலைக்கு கல்யாண் சிங் பெயர்
இந்நிலையில், அயோத்தியில் உள்ள ராமர் பிறந்த இடமாகக் கருதப்படும் ராம ஜென்ம பூமியை நோக்கி செல்லும் சாலைக்கு மறைந்த உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங்கின் பெயர் சூட்டப்படும் என உத்தரப் பிரதேசத்தின் தற்போதைய துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா அறிவித்துள்ளார்.
மேலும் அயோத்தியைத் தவிர, லக்னோ, பிரயாக்ராஜ், புலந்த்சஹர், அலிகார் ஆகிய இடங்களிலும் தலா ஒரு சாலைக்கு அவரது பெயர் சூட்டப்படும்" எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டும் என் கனவு நிறைவேறியது' - கல்யாண் சிங்