பத்தனம்திட்டா: 21 வயதேயான ரேஷ்மா மரியம் ராய், கேரளாவில் கிராம பஞ்சாயத்து தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
இடதுசாரி கூட்டணி சார்பாக பத்தனம்திட்டா மாவட்டம் அருவபுலம் பஞ்சாயத்து தேர்தலில் ரேஷ்மா போட்டியிட்டு வெற்றிபெற்றார். காங்கிரஸ் ஆதிக்கம் நிறைந்த 11ஆவது வார்டில் போட்டியிட்டு 70 வாக்குகள் வித்தியாசத்தில் ரேஷ்மா வென்றுள்ளார்.
கேரள தேர்தலில் முதல்முறையாக மிகக் குறைந்த வயதிலேயே பங்கேற்றவர் இவர் என்பதால், தற்போது ஊடகங்கள் வாயிலாக பிரபலமாகிவருகிறார். 2020 நவம்பர் 18ஆம் தேதி 21 வயதை எட்டிய ரேஷ்மா, அதற்கு அடுத்த நாளே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்தது குறிப்பிடத்தக்கது.
பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள விஎன்எஸ் கல்லூரியில் பிபிஏ முடித்த ரேஷ்மா, இடதுசாரி அமைப்புகள் பலவற்றில் உறுப்பினராக இருந்துவருகிறார். இவரது தந்தை பி. மேத்யூ ஒரு மர வியாபாரி, தாயார் மினி ராய் செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பணிபுரிகிறார். ராபின் மேத்யூ ராய் என்றொரு தம்பி இவருக்கு இருக்கிறார்.