சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 10 மாத குழந்தை ராதிகா யாதவ். இவரின் பெற்றோர் ராஜேந்திர குமார் யாதவ்-மஞ்சு யாதவ். ராஜேந்திர குமார், பிலாய் பகுதியில் ரயில்வே ஊழியராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில், கடந்த ஜூன் 1ஆம் தேதி குடும்பத்துடன் பைக்கில் சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் ராஜேந்திர குமார் மற்றும் அவரது மனைவி உயிரிழந்தனர். நல்வாய்ப்பாக குழந்தை உயிர் பிழைத்தார்.
குழந்தையை அவரது பாட்டி பராமரித்து வருகிறார். இந்தநிலையில், இந்தியன் ரயில்வே கருணை அடிப்படையில் ராதிகாவுக்கு வேலை வழங்குவதாக அறிவித்துள்ளது. ராதிகா தனது 18ஆவது வயதில் பணியில் சேருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ராய்ப்பூர் ரயில்வே கோட்ட அலுவலகத்தில், பணி நியமனத்திற்கான பதிவு கடந்த செவ்வாய்கிழமை மேற்கொள்ளப்பட்டது. மூத்த அலுவலர் ராதிகாவின் விரல் ரேகை பெற்று பதிவு செய்தார்.
இதுகுறித்து மூத்த அலுவலர் ஒருவர் கூறுகையில், "இந்தியன் ரயில்வே வரலாற்றில் 10 மாத குழந்தைக்கு பணி வழங்குவது இதுவே முதல் முறை. 18 வயது வந்த பின் அவர் பணியில் சேர்க்கப்படுவார். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பணியில் சேர்ந்தப்பின் ரயில்வே சலுகைகள் அவருக்கு வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: காயமுற்ற விலங்குகளுக்காக வீட்டை வனமாக்கிய வாரணாசி இளம்பெண்ணின் வாழ்க்கை!