ஐதராபாத் : நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் இருக்கை பகுதியில் நுழைந்து பாதுகாப்பு குளறுபடி ஏற்படுத்திய விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்கக் கோரி கடந்த டிசம்பர் 14ஆம் தேதி முதல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக கடந்த டிசம்பர் 14ஆம் தேதி அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்ததாக மக்களவையில் 13 எம்.பிக்களும், மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பியும் நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தனர்.
இருப்பினும், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், இன்று (டிச. 18) ஒரே நாளில் மக்களவையில் 33 எம்.பிக்களும், மாநிலங்களவையில் 45 உறுப்பினர்களும் என ஒட்டுமொத்தமாக 78 எம்.பிக்கள் அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்தததாக கூறி இடைநீக்கம் செய்யப்பட்டனர். நாடாளுமன்ற வரலாற்றில் ஒருநாளில் அதிகபட்சமாக எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இருந்து மட்டும் இதுவரை 92 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். அதில், மக்களவையில் இருந்து 46 எம்.பிக்களும், மாநிலங்களவையில் இருந்து 46 உறுப்பினர்களும் அடங்குவர். வரலாற்றில் அதிகளவிலான எம்.பிக்கள் இடை நீக்கம் செய்யப்படுவது இதுதான் முதல் முறையா? என்று கேட்டால் நிச்சயம் கிடையாது.
இதற்கு முன் 1989ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி தலைமையிலான அரசு இதேபோன்று நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி விவகாரத்தில் 63 எதிர்க்கட்சி எம்.பிக்களை மூன்று நாள் அமர்வுக்கு இடைநீக்கம் செய்தது. இதையடுத்து கடந்த 2015ஆம் ஆண்டு அப்போதைய சபாநாயகர் சுமித்ரா மஹாஜன் அமளியில் ஈடுபட்டதாக 25 காங்கிரஸ் உறுப்பினர்களை 5 அமர்வுகளுக்கு இடைநீக்கம் செய்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் தேதி காவேரி விவகாரத்தில் அமளியில் ஈடுபட்டதாக அதிமுகவின் 24 எம்.பிக்களை 5 அமர்வுகளுக்கு இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். அதற்கு மறுநாள் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி காவிரி விவகாரத்தில் தொடர் அமளியில் ஈடுபட்ட அதிமுக மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் 21 உறுப்பினர்களை 4 அமர்வுகளுக்கு இடைநீக்கம் செய்தார்.
அதைத் தொடர்ந்து கடந்த 2022ஆம் ஆண்டு விலைவாசி உயர்வு மற்றும் ஜிஎஸ்டி வரி உயர்வு குறித்து அவசர விவாதம் நடத்தக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 19 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒரு வாரத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
தெலங்கானா மாநிலம் பிரிப்பதில் ஏற்பட்ட அமளியில் அப்போதைய சபாநாயகர் மீரா குமார் ஆந்திராவின் 18 எம்.பிக்களை இடைநீக்கம் செய்தார். அப்போது வரலாறு காணாத அளவில் அவையில் அமளி நடைபெற்றது. அப்போதைய காங்கிரஸ் உறூப்பினர் எல். ராஜகோபால் அவையில் பெப்பர் ஸ்பிரே பயன்படுத்தினார்.
தெலுங்கு தேசம் கட்சி எம்.பி வேணுகோபால ரெட்டி அவையின் ஒலிவாங்கியை அடித்து நொறுக்கினார். இந்த சம்பவத்தை அடுத்து காங்கிரஸ், தெலுங்கு தேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க : "ஜனநாயக நெறிமுறைகள் குப்பையில் வீசப்பட்டு உள்ளன" - மல்லிகார்ஜூன கார்கே காட்டம்!