கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சி புரிந்து வரும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வனத்துறை அமைச்சராக ஜோதிப்ரியா மல்லிக் பதவி வகித்து வருகிறார். இவர் உணவுத்துறை அமைச்சராக பணியாற்றியபோது, ரேஷன் விநியோகத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து சட்ட விரோத பணப் பரிவர்த்தனைப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அந்த வகையில், இந்த வழக்கு தொடர்பாக நேற்று காலை (அக்.26) அமைச்சர் ஜோதிப்ரியா மல்லிக்கிற்குச் சொந்தமான 2 வீடுகள் மற்றும் அவர் தொடர்புடைய பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக, அமைச்சர் ஜோதிப்ரியா மல்லிக்கிடமும் அமலாக்கத் துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.
முன்னதாக, கடந்த வாரம் ரைஸ் மில், ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் மற்றும் பார்கள் முதலியவற்றை சொந்தமாக நடத்தி வரும் தொழிலதிபரும், அமைச்சர் ஜோதிப்ரியா மல்லிக்காவிற்கு நெருக்கமானவருமான பாகிபுர் ரஹ்மான் என்பவருக்குச் சொந்தமாக கைகாலியில் உள்ள அவரது குடியிருப்பில் அமலாக்கத் துறையினர் நடத்திய 53 மணிநேர சோதனை முடிவில் ரஹ்மானை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
மேலும், ரஹ்மானின் குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனையில், அரசாங்க அலுவலகங்களின் முத்திரைகளுடன் கூடிய 100க்கும் மேற்பட்ட ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், ரஹ்மானுக்குச் சொந்தமான நிறுவனங்களில் அமைச்சர் ஜோதிப்ரியா மல்லிக் சுமார் ரூ.50 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், மேற்கு வங்க வனத்துறை அமைச்சர் ஜோத்பிரியா மல்லிக் மாநில உணவுத் துறை அமைச்சராக இருந்தபோது ரேஷன் விநியோகத்தில் ஊழல் செய்ததாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக, அவரது வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து, இன்று (அக் 27) அதிகாலை கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று (அக்.26) அமைச்சர் ஜோதிப்ரியா மல்லிக் உட்பட 8 இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைகளுக்கு பாஜக தலைமையிலான மத்திய அரசின் தூண்டுதல்தான் காரணம் என்று விமர்சித்தார். மேலும், "எனது கேள்வி என்னவென்றால், பாஜக தலைவர்களில் ஒருவர் வீட்டில் கூட ஏன் சோதனை நடத்தப்படவில்லை?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் 8 பேருக்கு மரண தண்டனை - கத்தார் நீதிமன்றம் தீர்ப்பு! மத்திய அரசின் நடவடிக்கை என்ன?