ஹாவேரி (கர்நாடகா): கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் லிங்கடஹள்ளி என்ற கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஷேத்ர லிங்கடஹள்ளி ஹிரேமாத் சிவாலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் பிரசித்தி பெற்ற, தென்னிந்தியாவிலேயே மிகவும் பெரியதாக கருதப்படும் ஸ்படிக லிங்கம் ஒன்றும் உள்ளது.
இது மிகவும் சக்தி வாய்ந்தது. ஆகையால் இக்கோவிலை ஸ்படிக சிவலிங்க ஆலயம் எனவும் உள்ளூர் மக்கள் அழைத்து வந்தனர். இந்த நிலையில் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் கோவிலுக்குள் இருந்த ஸ்படிக லிங்கத்தை திருடிச் சென்றுள்ளனர்.
கோவிலின் நிர்வாகி வீரபத்ர சிவாச்சாரிய சுவாமிகள் கோவிலில் இல்லாத நேரம் பார்த்து இந்தத் திருட்டை அடையாளம் தெரியாத நபர்கள் செய்துள்ளனர். ஜூன் 6ஆம் தேதி திங்கள்கிழமை இரவு நடைபெற்ற, இந்தத் திருட்டுச் சம்பவம் மறுநாள் செவ்வாய்க்கிழமைதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஹலகேரி காவல் நிலைய காவலர்கள் கோவிலுக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினார்கள். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். திருடு போன ஸ்படிக சிவலிங்கம் 13 அங்குலம் நீளம் கொண்டதாகும்.
கர்நாடகாவில் உள்ள ஸ்ரீ ஷேத்ர லிங்கடஹள்ளி ஹிரேமாத் சிவாலயத்தில் 1001 லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. நாடு முழுக்க உள்ள 12 ஜோதிர்லிங்கங்களும் இங்குள்ளன. மடத்தில் உள்ள 12 தூண்களில் சக்தி தெய்வங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இந்தக் கோவில் மடத்தில் உள்ள ஸ்படிக லிங்கம் திருடு போனது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவிலின் நிர்வாகியான வீரபத்ர சிவாச்சாரிய சுவாமிகள் அரசு அலுவலர் ஆவார். இவர் தனது சம்பளத்தை மடத்துக்கே வழங்கிவிடுவார்.
இதையும் படிங்க: அமர்நாத் பனி லிங்கத்துக்கு பிரதான பூஜை!