ராஞ்சி : காசோலை மோசடி வழக்கில் பாலிவுட் நடிகை அமீசா பட்டேலுக்கு ராஞ்சி நீதிமன்றம் 500 ரூபாய் அபராதம் விதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான புதிய கீதை படத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகை அமீஷா பட்டேல். இவர் தனது தொழில் பங்குதாரருடன் இணைந்து தேசி மேஜிக் என்ற படத்தை இயக்க உள்ளதாக கூறி சினிமா தயாரிப்பாளர் அஜெய் குமார் சிங்கிடம் இரண்டரை கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளார்.
இந்நிலையில் 6 மாதங்களை தாண்டியும் படத்திற்கான பணிகள நடைபெறாததை கண்டு நடிகை அமீஷா பட்டேலிடம் பணத்தை திருப்பி தருமாறு தயாரிப்பாளர் அஜெய் குமார் சிங் கேட்டு உள்ளார். அவரை மும்பை வரவழைத்த அமீஷா பட்டேல், வாங்கிய கடன் இரண்டரை கோடி ரூபாய் மற்றும் 50 லட்ச ரூபாய் வட்டி என இரண்டு காசோலைகளை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இரண்டு காசோலைகளையும் தயாரிப்பாளர் வங்கியில் செலுத்திய போது பணம் இல்லை என திரும்பி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அமீஷா பட்டேல் மீது காசோலை மோசடி வழக்கை தயாரிப்பாளர் அஜெய் குமார் சிங் தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை ராஞ்சி நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்து வந்த அமீஷா பட்டேலுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் நீதிபதி பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜரான அமீஷா பட்டேல் ஜாமீன் பெற்றார். இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் தயாரிப்பாளர் தரப்பில் சாட்சியங்கள் ஆஜராகின.
வழக்கின் போதிய ஆவணம் தேவைப்படுவதாக அமீஷா பட்டேலின் வழக்கறிஞர் நீதிபதி முன்னிலையில் தெரிவித்தார். இதையடுத்து வழக்கு ஆகஸ்ட் 7ஆம் தேதி ஒத்திவைத்த நீதிபதிகள் நடிகை அமீஷா பட்டேலுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர். இதனிடையே நீதிபதி முன் ஆஜரான தயாரிப்பாளர் அஜெய் குமார் சிங், பாலிவுட் நடிகை அமீஷா பட்டேல் மற்றும் அவரது கூட்டாளி பணம் கேட்டு தன்னை செல்போன் மூலம் மிரட்டுவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க : மேல்படிப்புக்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... அமெரிக்காவில் சிக்கிய மகளை மீட்க தாய் கோரிக்கை!