ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் ஆகத் திகழும் சிரஞ்சீவியின் மகனான ராம்சரண், தனது தந்தையைப் போலவே தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொழிலதிபர் எனப் பல முகங்களைக் கொண்டவராக விளங்கி வருகிறார்.
இயக்குநர் ராஜமௌலியின் இயக்கத்தில் வெளியான 'மாவீரன்' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். கடைசியாக இவரது நடிப்பில் பான் இந்தியா படமாக 'ஆர்ஆர்ஆர்' வெளியாகி வசூலை வாரிக் குவித்தது குறிப்பிடத்தக்கது.
2012ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி, ராம் சரண்- உபாசனாவைக் கரம்பிடித்தார். அவர்களது திருமண வாழ்க்கை, இனிமையாக சென்று கொண்டு இருந்தது. இந்நிலையில், 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், உபாசனா, கர்ப்பமாக உள்ளதாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, வளைகாப்பு நிகழ்ச்சி, வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், திரையுலகப் பிரபலங்கள், பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: நடிகர் ராம்சரண் - உபாசனா தம்பதிக்கு, பெண் குழந்தை பிறந்து உள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக, அப்போலோ மருத்துவமனை வெளியிட்டு உள்ள அறிக்கையில், "திருமதி உபாசனா காமினேனி கொனிடேலா மற்றும் திரு ராம் சரண் கொனிடேலா இருவருக்கும் ஜூன் 20, 2023 அன்று ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனை ஜூபிலி ஹில்ஸில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை மற்றும் தாய் இருவரும் நலமாக உள்ளனர்" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த அறிவிப்பு, ராம் சரண் ரசிகர்களை மட்டுமல்லாது, திரையுலகப் பிரபலங்களையும் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இதுதொடர்பாக, நடிகை ரகுல் பிரீத் சிங், வெளியிட்டு உள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், " ஓஹோ.. வாழ்த்துக்கள்... எல்லா அன்புடனும் மகிழ்ச்சியுடனும் ஆசீர்வதிக்கப்படட்டும்" என்று குறிப்பிட்டு உள்ளார்.
பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும், ‘கேம் சேஞ்சர்’ என்ற ஆக்ஷன் படத்தில், ராம் சரண், தற்பாது நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு, இறுதிகட்டத்தை எட்டி உள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தப் படத்தில், ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்து வருகிறார்.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என 3 மொழிகளில் வெளியாக உள்ள இந்தப் படத்தில், எஸ். ஜே. சூர்யா, ஜெயராம், அஞ்சலி, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர். இந்தப் படம், விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.