மாநிலங்களவை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டுவரும் நிலையில், அமைதியாக இருக்கும்படி மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு பலமுறை அறிவுறுத்தியும் அதனை அவர்கள் பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.
இந்தச் சூழலில் இன்று நடைபெற்ற கூட்டத்திலும் அமளி நீடித்ததால் வெங்கையா நாயுடு கண்ணீர் மல்க தனது வேதனையை வெளிப்படுத்தினார். அமளியின்போது உறுப்பினர்கள் மேசை மீது ஏறி கோஷமிட்டனர், மேலும் கையில் இருந்த பொருள்களைத் தூக்கி எறிந்தனர்.
நேற்றைய கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி எம்பிக்கள் கறுப்புக் கொடி காட்டியும், கோப்புகளை வீசி எறிந்தும் கடும் அமளியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், இன்று மாநிலங்களவையில் அவைத் தலைவர் வெங்கையா நாயுடு கண்ணீர் மல்க நா தழுதழுத்த குரலில் பேசினார்.
அப்போது, "இந்த அவையின் அனைத்து மாண்புகளும் நேற்று அழிக்கப்பட்டுள்ளன. கொஞ்சம் உறுப்பினர்கள் மேசையின் மீது ஏறியும், சிலர் அமர்ந்தும் அமளியில் ஈடுபட்டனர். நேற்று ஏற்பட்ட கடும் அமளியில், காங்கிரஸ் உறுப்பினர் பிரதாப் சிங் பாஜ்வா மேசை மீது ஏறி அவைத் தலைவரின் இருக்கையை நோக்கி கோப்புகளை வீசி எறிந்தார்" என வெங்கையா நாயுடு வேதனையுடன் தெரிவித்தார்.
பெகாசஸ் விவகாரம், வேளாண் சட்டங்கள், பணவீக்கம், கரோனா நெருக்கடி உள்ளிட்டவை குறித்து விவாதம் நடத்தக் கோரி மக்களவை, மாநிலங்களவையை நடத்தவிடாமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையூறு செய்துவருகின்றனர்.
முன்னதாக, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தவறான முறையில் நடந்துகொண்டதாகத் பிரதமர் மோடி விமர்சித்தார். அப்போது, காகிதங்களைக் கிழிப்பது, மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட விதம் குறித்து கண்ணிய குறைவான கருத்துகளைத் தெரிவிப்பது போன்று செயல்களில் ஈடுபட்டுவருவதாகவும், அவையையும் அரசியலமைப்பையும் அவமதிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க: பெகாசஸ் விவகாரம்: பிரதமர் மோடி பதிலளிக்க மறுப்பது ஏன்? - ப.சிதம்பரம் கேள்வி