ஜெய்சல்மர் (ராஜஸ்தான்): ஜெய்சல்மர், ரித்வா கிராமத்தைச் சேர்ந்தவர் நர்பட்ராம். கூலி தொழில் செய்து வரும் நர்பட்ராம், மாதம் 5 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்டி வருகிறார். தந்தை விவசாயித் தொழில் செய்து வருவதால் அதைக் கொண்டு குடும்பச் செலவுகளைத் தீர்த்து வருவதாகத் தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில், வடக்கு டெல்லி ஜி.எஸ்.டி ஆணையரகத்தில் இருந்து நர்பட்ராமுக்கு நோட்டீஸ் வந்துள்ளது. அதில் செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகை 1 கோடியே 39 லட்சத்து 79 ஆயிரத்து 407 ரூபாயை செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலுவைத் தொகையை செலுத்தத் தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நர்பட்ராம், இதுகுறித்து ஆணையரகத்தில் முறையிட்டுள்ளார். விசாரணையில் பகீர் உண்மைத் தகவல்கள் வெளியாகின. கடந்த சில மாதங்களுக்கு முன் நர்பட்ராமை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் அரசு அதிகாரிகள் தோரணையில் விசாரித்து, நர்பட்ராமின் ஆதார், பான் கார்டு எண் உள்பட முக்கிய விவரங்கள் மற்றும் ஓடிபி எண்களை பெற்றுள்ளனர்.
பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு நர்பட்ராம் பெயரில் டெல்லியில் நிறுவனம் தொடங்கிய மர்ம நபர்கள் ஜி.எஸ்.டி வரி செலுத்தாமலும், தொடர் நிதி மோசடியிலும் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. நிறுவனம் நர்பட்ராம் பெயரில் இயங்கி வருவதை அடுத்து அவருக்கு ஜி.எஸ்.டி ஆணையரகம் நோட்டீஸ் அனுப்பியது தெரியவந்தது. இந்த நூதன மோசடி சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு வழக்கில் விரைவில் முடிவு - இறுதிகட்ட விசாரணையில் உச்ச நீதிமன்றம்!