ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் உள்ள கும்ஹர் கஸ்பாவில் புத்த மதத்திற்கு மாறி திருமணம் செய்துகொண்ட 11 தம்பதிகள் இந்துக் கடவுள்களை நம்பமாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த திருமண ஏற்பாடுகளை சாந்த் ரவிதாஸ் சேவா சமிதி என்னும் அமைப்பு செய்தது. இந்த திருமண நிகழ்வில் உள்ளூர் மக்களில் ஒருவரும், அரசு அலுவலர் ஒருவரும் கலந்துகொண்டனர். இந்த திருமணம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
அந்த வீடியோவில் மணமக்கள் திருமணத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இந்து மதத்திலிருந்து புத்த மதத்திற்கு தம்பதிகள் மாறுகின்றனர். அதன்பின் அவர்கள் பிரம்மா, விஷ்ணு, சிவன் கடவுள்களை நம்பமாட்டோம். அதேபோல கணபதி, மஹா கௌரியை வணங்கமாட்டோம் என்று உறுதிமொழி ஏற்கின்றனர்.
அதன்பின் புத்த மதத்திற்கு எதிராக எந்த கருத்தும் தெரிவிக்க மாட்டோம் என்றும் உறுதிமொழி ஏற்கின்றனர். இதுகுறித்து சாந்த் ரவிதாஸ் சேவா சமிதி உறுப்பினரும், திருமண ஒருங்கிணைப்பாளருமான லால்சந்த் தனுகுரியா கூறுகையில், புத்த மதத்தைத் தழுவி திருமணம் செய்துக்கொள்ளும் தம்பதிகளுக்கு பதிவுக் கட்டணமாக ரூ.11,000 விதிக்கப்படும். மீதமுள்ள திருமண செலவுகளை சந்த் ரவிதாஸ் சேவா சமிதி ஏற்றுக்கொள்ளும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ராணுவ வீரர்களுக்கு திருமண அழைப்பிதழ் - வைரலாகும் கேரள ஜோடி...