கோடா : டெல்லியில் இருந்து மும்பை நோக்கி சென்ற தேஜஸ் ராஜதானி விரைவு ரயிலில் லோகித் ரீகர் என்பவர் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி பயணித்து உள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த நகைக் கடை அதிபரான விகாஸ் சர்தானா என்பவரிடம் லோகித் ரீகர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி 33 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 540 கிராம் தங்கம் மற்றும் 36 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்துடன் லோகித் ரீகர் தேஜஸ் ராஜதானி விரைவு ரயிலில் பயணித்து உள்ளார்.
தனது முதலாளியின் தங்க நகைகளை புதுப்பிப்பதற்காக லோகித் ரீகர் மும்பை நோக்கி சென்று உள்ளார். இந்நிலையில், ரயிலில் லோகித் ரீகரின் டிக்கெட் உறுதியாகாத நிலையில், உரிய டிக்கெட் இன்றி பயணித்ததாக கூறி டிக்கெட் பரிசோதகர் லோகித் ரீகருக்கு 5 ஆயிரத்து 300 ரூபாய் அபராதம் விதித்து தொடர்ந்து பயணிக்க அனுமதி அளித்து உள்ளார்.
இந்நிலையில், ரயிலின் பி5 பெட்டியில் லோகித் ரீகர் பயணித்த நிலையில், அவரிடம் பி5 மற்றும் பி6 பெட்டிகளின் உதவியாளர்கள் என இருவர் அறிமுகமானதாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவரும் லோகித்திடம் லேசாக பேச்சுக் கொடுத்து பெட்டியில் என்ன இருக்கிறது என தெரிந்து கொண்டதாக சொல்லப்படுகிறது.
இதனிடையே ரயில்வே போலீசார் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் ரயிலில் சோதனையிட்டு வருவதாகவும், அளவுக்கு அதிகமாக பணம் மற்றும் நகை கொண்டு செல்வதால் அதை பறிமுதல் செய்தால் திருப்பித் தரமாட்டார்கள் என லோகித் ரீகரை, ரயில்வே பணியாளர்கள் நம்பவைத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இருவரும் லோகித் ரீகரிடம் இருந்த பெட்டிகளை மறைத்து வைக்க உதவுவதாக கூறியதாகவும் பாதுகாப்பு சோதனை முடிந்ததும் பெட்டிகளை திரும்பத் தருவதாக தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது. அவர்களது பேச்சை நம்பி லோகித் பெட்டிகளை கொடுத்த நிலையில் இருவரும் பணம் மற்றும் நகைப் பெட்டியுடன் தலைமறைவானதாக கூறப்படுகிறது.
சிறிது நேரம் தாண்டி இருவரையும் காணத நிலையில், சந்தேகமடைந்த லோகித் ரீகர் ரயில் முழுவதும் அவர்களை தேடி உள்ளார். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தனது முதலாளிக்கும் தகவல் அளித்து உள்ளார். இருப்பினும் இருவரும் தலைமறைவானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து லோகித் ரீகர் அளித்த புகாரின் பேரில் ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : 3 மாதங்களுக்கு பின் கூடும் எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணி! என்னென்ன முடிவுகள் எடுக்க உள்ளன? ஒரு அலசல்!