வடக்கு ரயில்வேயின் மூத்த வணிக மேலாளரும், ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான சுஷில் குமாருக்கும் மல்யுத்த வீரர் சாகர் ராணா தன்கட்டுக்கும், இரண்டு வாரங்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள சத்ராஸல் அரங்கில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சுஷில் குமாரும் அவரின் நண்பர்களும் தன்கட்டை கடுமையாகத் தாக்கிவிட்டுத் தப்பியோடினர்.
படுகாயங்களுடன் கிடந்த சாகர் ராணா தன்கட்டை மற்றொரு நண்பர் சோனு மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். ஆனால், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சுஷில் குமாரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தனர். அவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
மேலும், அவர் குறித்து தகவல் அளிப்போருக்கு 1 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் எனவும்; காவல் துறை தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. சுஷில் குமாரை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், மே.23ஆம் தேதி டெல்லி காவல் துறையின் தனிப்படை அவரை அதிரடியாக கைது செய்தனர்.
இந்தக் கொலை வழக்குத் தொடர்பான அறிக்கையை ரயில்வே வாரியம் டெல்லி அரசிடமிருந்து மே 23ஆம் தேதி பெற்றது. அவர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், வடக்கு ரயில்வே இன்று (மே.25) அவரை பணியிடை நீக்கம் செய்தது. 37 வயதாகும் சுஷில் குமார், இந்தியாவுக்காக கடந்த 2008ஆம் ஆண்டில் வெண்கலமும், 2012ஆம் ஆண்டில் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கமும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.