டெல்லி: ரயில்வே வாரியம் தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை ஜூலை 1, 2023 முதல் 4 சதவீதம் உயர்த்தி, 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக உயர்த்தி, அடிப்படை ஊதியத்தின் அகவிலைப்படி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்த நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த 5 நாட்களுக்குப் பிறகு, ரயில்வே ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது.
அக்டோபர் 23, 2023 தேதியிட்ட இந்த எழுத்துப்பூர்வமான அறிவிப்பை, ரயில்வே வாரியத்தின் பொது மேலாளர்கள் (General Managers) மற்றும் அகில இந்திய ரயில்வே மற்றும் உற்பத்தி பிரிவுகளின் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு (Chief Administrative Officers) ரயில்வே வாரியம் வழங்கியுள்ளது.
மேலும் ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், "ரயில்வே ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியானது 4 சதவீதம் உயர்த்தி, 2023ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் அடிப்படை ஊதியத்தில் தற்போதுள்ள 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக உயர்த்தப்படும்.
இந்த சமீபத்திய மேம்பாட்டிற்குப் பிறகு, ஊழியர்கள் தங்களுக்கு வரவிருக்கும் சம்பளத்தில் ஜூலை முதல் நிலுவைத் தொகையுடன் உயர்த்தப்பட்ட டிஏ-ஐப் பெறுவார்கள். அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட 7வது மத்திய ஊதியக் குழு (CPC - Central Pay Commission) பரிந்துரையின்படி பெறப்படும் ஊதியம், அடிப்படை ஊதியம் என சுற்றறிக்கை விவரிக்கிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அகவிலைப்படி உயர்வை ரயில்வே தொழிற்சங்கங்கள் வரவேற்றுள்ளன. மேலும், நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் (CPI - Consumer Price Index) அடிப்படையில் உயர்த்தப்படும் அகவிலைப்படி உயர்வு, பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வில் இருந்து ரயில்வே ஊழியர்களைப் பாதுகாக்கும் நோக்கில் அமைந்துள்ளதாக ரயில்வே ஊழியர்கள் சங்கத் தலைவர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: வங்கதேசத்தில் பயங்கர ரயில் விபத்து விபத்து; 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு எனத் தகவல்!