டெல்லி: காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, நாட்டில் கரோனா தொற்றின் 2ஆவது அலைக்கு பிரதமர் மோடிதான் காரணம். தடுப்பூசி போடும் பணி இதேபோல மெதுவாக நடைபெற்றால் மேலும் பல அலைகள் ஏற்படும். உலகத்தின் தடுப்பூசி தலைநகரமாக இந்தியா இருந்த போதிலும், இதுவரை 3 விழுக்காடு மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.
இச்சூழலில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "நாட்டில் கரோனா தொற்று வேகத்தைத் தடுக்க பிரதமர் மோடி உழைத்து வரும் வேளையில், அவரை விமர்சிக்கும் ராகுல் காந்தியின் வார்த்தைகளும், தொனியும், அரசைக் குறைகூறும் ஆவணத்தின் (டூல்கிட்) பின்னணியில் காங்கிரஸ் இருப்பதைக் காட்டுகிறது. அதன் ஓர் அங்கமாகவே ராகுல் காந்தியின் விமர்சனம் அமைந்திருக்கிறது.
தற்போது அது உறுதியாகி இருக்கிறது. வேறு சான்றே தேவையில்லை. அந்த ஆவணம் உங்களால் தயாரிக்கப்பட்டது தான். அந்த அரசியலின் ஓர் அங்கமாகத்தான் நீங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்த முயல்கிறீர்கள்.
நீங்கள் கூறியிருப்பது, நாட்டையும், நாட்டு மக்களையும் அவமதிப்பதாகும். நாட்டில் தடுப்பூசி போடும் பணி டிசம்பர் மாதத்தில் முடிவடையும் என்று சுகாதார அமைச்சகம் ஏற்கனவே கூறியிருக்கிறது. டிசம்பருக்குள் எப்படி 216 கோடி தடுப்பூசி உற்பத்தி செய்யப்படும், 108 கோடி மக்களுக்கு எவ்வாறு தடுப்பூசி போடப்படும் என்ற விளக்கத்தையும் அது அளித்திருக்கிறது.
நாட்டில் தடுப்பூசி போடும் பணி மெதுவாக நடைபெறுவதாக ராகுல் காந்தி கூறியிருக்கிறார். ஆனால் இதுவரை 20 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள நிலையில், இந்தியா உலகளவில் 2ஆவது இடத்தில் இருக்கிறது. ஆகஸ்டு மாதம் முதல் தடுப்பூசி போடும் பணி பெரிய அளவில் நடைபெற போகிறது" என்று அவர் கூறியுள்ளார்.