ஸ்ரீநகர்: கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை பயணம் வரும் 30ஆம் தேதி ஸ்ரீநகரில் முடிவடைகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்ட ராகுல் காந்தி, தற்போது பஞ்சாப்பில் இறுதி கட்ட நடைபயணத்தில் ஈடுபட்டுள்ளார்.
தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் செல்லும் ராகுல் காந்தி, தலைநகரில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து தன் யாத்திரையை நிறைவுக்குக் கொண்டு வரத் திட்டமிடுள்ளார். பல்வேறு மாநிலங்களைக் கடந்து ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை இறுதியாக காஷ்மீரை அடைகிறது.
திட்டமிட்டபடி, காஷ்மீரின் லக்கன்பூருக்கு ராகுல் காந்தி செல்ல உள்ளார். அங்கிருந்து கதுவாவின் ஹட்லி மோர் பகுதியில் இருந்து ராகுல் காந்தி புறப்படுகிறார். தொடர்ந்து சட்வா, ஹிரா நகர், துகர் ஹவேலி வழியாக விஜயபூர், சத்வாரி செல்ல திட்டமிட்டுள்ள ராகுல் காந்தி வரும் 27ஆம் தேதி அனந்த்நாக் வழியாக ஸ்ரீநகருக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.
வரும் 30ஆம் தேதி ஸ்ரீநகரில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்துடன் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை நிறைவடைகிறது. காஷ்மீர் வரும் ராகுல் காந்தியை வரவேற்கும் விதமாக விளம்பரப் பலகைகள், போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மேலும் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா தன் ஆதரவாளர்களுடன் ராகுல் காந்தியை வரவேற்க லக்கன்பூருக்குச் சென்றார்.
ராகுல் காந்தியை வரவேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஃபரூக் அப்துல்லா தன் ஆதரவாளர்களுடன் தனி பேருந்தில் பயணித்தார். முன்னாள் முதலமைச்சரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முக்தி, ஜம்மு விமான நிலையத்திற்கு வெளியே ஒரு பெரிய விளம்பரப் பலகையை வைத்து, ராகுல் காந்தியை வரவேற்றுள்ளார்.
காஷ்மீரில் நடைபயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி, பாதுகாப்பு காரணமாக, தன்னுடன் செல்லும் கூட்டத்தை குறைத்துக் கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேநேரம் ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு அனுமதி வழங்கி உள்ளது.
இதையும் படிங்க: Delhi: காரில் மீண்டும் தரதர சம்பவம் - மகளிர் ஆணையத் தலைவருக்கே நடந்த கொடுமை!