டெல்லி : நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான 2வது நாள் விவாதத்தில் நண்பகல் 12 மணிக்கு ராகுல் காந்தி உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் தொடங்கியது முதலே எதிர்க்கட்சிகள் அவையில் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மணிப்பூர் விவாகரத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், மணிப்பூர் விவகாரம், பழங்குடியின பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு பிரதமர் மோடி விளக்கம் அளிக்கக் கோரி கடந்த ஜூலை 26 ஆம் தேதி காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய் மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டீஸ் தாக்கல் செய்தார். இதையடுத்து நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று (ஆகஸ்ட். 8) மக்களவையில் தொடங்கியது.
காங்கிரஸ் மக்களவை துணை தலைவரும், அசாம் மாநில எம்.பியுமான கவுரவ் கோகாய், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தை தொடக்கி வைத்தார். தொடர்ந்து எதிர்க்கட்சிகள் சார்பில் திமுக எம்.பிக்கள் டி.ஆர் பாலு, திருமாவளவன், தேசியவாத காங்கிரஸ் சார்பில் சுப்ரியா சுலே உள்ளிட்டோர் விவாதம் நடத்தினர்.
அதேபோல் மத்திய அரசு தரப்பில் எம்.பி. நிஷிகாந்த் துபே, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு உள்ளிட்டோர் விவாதித்தனர். இந்நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான 2வது நாள் விவாதம் இன்று (ஆகஸ்ட். 9) நடக்கிறது. இன்றைய விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேச உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மக்களவைக்குள் மீண்டும் நுழைந்த ராகுல் காந்தி முதல் முறையாக பேச இருப்பது குறிப்பிடத்தக்கது.
மோடி அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் விதித்த இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையை அண்மையில் உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இதையடுத்து ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்கப்பட்டது. கடந்த 7ஆம் தேதி மக்களவை நடவடிக்கையில் கலந்து கொண்ட ராகுல் காந்தி கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார்.
இதனிடையே காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, இன்றைய விவாதத்தில் ராகுல் காந்தி நிச்சயம் உரையாற்றுவார் என தெரிவித்து உள்ளார். மணிப்பூரில் 120க்கும் மேற்பட்ட மக்களை பலியாக்கிய வன்முறையில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு சந்தித்த தோல்விகள் குறித்து ராகுல் காந்தி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : சென்சார் வேலை செய்யாவிட்டாலும் சந்திரயான்-3 தரையிறங்குவதில் சிக்கல் இல்லை: இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்