டெல்லி : காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, லாரியில் பயணிப்பதும் மற்றும் ஓட்டுநர்களுடன் கலந்துரையாடுவது போன்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது.
அரியானா மாநிலம், முர்தால் நகருக்குச் சென்ற ராகுல் காந்தி, அங்கிருந்து அம்பாலா நகருக்கு லாரியில் பயணம் செய்தார். லாரி ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்களுடன் கலந்துரையாடிய படி ராகுல் காந்தி பயணம் செய்தார். இது குறித்த புகைப்படங்களை வெளியிட்ட காங்கிரஸ் கட்சி, லாரி ஓட்டுநர்கள் மற்றும் உதவியளார்கள் படும் துயரங்கள் மற்றும் பிரச்னைகள் குறித்து ராகுல் காந்தி கேட்டறிந்ததாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அரியானாவில் உள்ள முர்தால் நகருக்கு இரவு 11 மணிக்குச் சென்ற ராகுல் காந்தி அங்கிருந்த ஒரு லாரியில் ஏறி பயணம் செய்தார். நள்ளிரவு வரை லாரி ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி பேசிக்கொண்டு இருந்ததாக காங்கிரஸ் கட்சி தெரிவித்து உள்ளது. வழிப் பயணங்களில் ஏற்படும் பிரச்னை மற்றும் இடர்கள் குறித்தும் அதை எவ்வாறு சமாளிப்பீர்கள் என்பது குறித்தும் லாரி ஓட்டுநரிடம் ராகுல் காந்தி விசாரித்ததாக கூறப்பட்டு உள்ளது.
அம்பாலா வரை லாரியில் பயணம் செய்த ராகுல் காந்தி அங்கிருந்து சாலை வழியாக இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவுக்கு சென்றதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ராகுல் காந்தியின் இந்த திடீர் பயணம் குறித்து காங்கிரஸ் கட்சி முதலில் மவுனம் காத்து வந்தது. லாரியில் பயணிப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், காங்கிரஸ் கட்சி மவுனம் கலைத்து உள்ளது.
அண்மைக் காலமாக ராகுல் காந்தி பல்வேறு வெளிப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார். டெல்லி மந்தி ஹவுஸ் சாலையில் உள்ள பெங்காலி மார்க்கெட், ஜம்மா மஸ்ஜித் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி தோன்றி உள்ளூர் உணவுகளை ருசிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளால் பொது மக்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லி பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர் விடுதிக்குச் சென்ற ராகுல் காந்தி, அங்குள்ள மாணவர் விடுதியில் யுபிஎஸ்சி தேர்வுகளுக்குத் தயாராகி வரும் மாணவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார். யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராவதில் உள்ள சிக்கல்கள், மத்திய அரசுப் பணிகளில் இளைஞர்களுக்கு உள்ள எதிர்பார்ப்புகள் உள்ளிட்டப் பல்வேறு தலைப்புகளில் ராகுல் காந்தி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதன் முன்னோட்டமாக ராகுல் காந்தியின் இந்த திடீர் பயணங்கள் காணப்படுவதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை யாத்திரையைத் தொடங்கிய ராகுல் காந்தி கடந்த ஜனவரி மாதம் அதை வெற்றிகரமாக காஷ்மீரில் நிறைவு செய்தார்.
ராகுல் காந்தியில் இந்த ஒற்றுமை யாத்திரையில் விளைவு கர்நாடக தேர்தலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. வரலாறு காணாத வகையில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கர்நாடகாவில் கைப்பற்றி ஆட்சி அதிராத்தைப் பிடித்தது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு ராகுல் காந்தியின் யுக்திகளில் ஒன்றாக இந்தப் பயணமும் காணப்படுகிறது.
இதையும் படிங்க : ரூ.2 ஆயிரம் நோட்டுக்களை இன்று முதல் வங்கிகளில் மாற்றலாம்! வழிமுறைகள் என்னென்ன?