நாட்டில் கரோனா வைரஸின் கோரப்பிடி நாளுக்கு நாள் மோசமாகிவரும் நிலையில், பிரதமர் மோடி இன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது, கரோனா தொற்று நோயின் இரண்டாவது அலை நாட்டையே உலுக்கியிருப்பதாகவும், மாநிலங்களுக்கு உதவ மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுவருவதாகக் கூறினார்.
இந்நிலையில், பிரதமரின் உரையை விமர்சிக்கும் வகையில், ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “அமைப்பு தோல்வி அடைந்துவிட்டது. எனவே, மக்களின் குரலாக இருப்பது முக்கியம். இந்த நெருக்கடியான காலத்தில், நாட்டிற்கு பொறுப்பான குடிமக்கள் தேவை.
எனது சக காங்கிரஸ்காரர்கள் அனைத்து அரசியல் பணிகளையும் விட்டுவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் வழங்கி, நம் நாட்டு மக்களின் வலியைக் குறைக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.