கலிஃபோர்னியா: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பத்து நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று(மே.30) அமெரிக்கா சென்றார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்ட பிறகு முதல்முறையாக சாதாரண இந்தியராக ராகுல்காந்தி அமெரிக்கா சென்றுள்ளார். நேற்று சான்பிரான்சிஸ்கோவில் அமெரிக்க வாழ் இந்தியர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார்.
அதைத் தொடர்ந்து நேற்று இரவு, கலிஃபோர்னியாவில் உள்ள புகழ்பெற்ற ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர்கள் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்வியாளர்களுடன் கலந்துரையாடினார். மாணவர்களின் கேள்விகளுக்கு ராகுல்காந்தி பதிலளித்தார்.
அப்போது, எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த ராகுல்காந்தி, "நான் அரசியலுக்கு வந்தபோது இதுபோல நடக்கக் கூடும் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஆனால், இந்த தகுதி நீக்கம் எனக்கு மிகப்பெரிய வாய்ப்பை அளித்திருக்கிறது. உண்மையில் எம்பியாக இருந்ததை விட, மக்களுக்கு சேவை செய்ய மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றே கருதுகிறேன்.
இந்த எல்லா நாடகங்களும் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. நாங்கள் போராடிக் கொண்டிருந்தோம். நாங்கள் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் போராடிக் கொண்டிருக்கின்றன. நம் நாட்டில் ஜனநாயகத்திற்காக நாங்கள் போராடுகிறோம். அந்த சூழலில்தான் நான் பாரத் ஜடோ யாத்திரை செல்ல முடிவு செய்தேன்.
நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன். எங்களது போராட்டம் என்பது நம் நாட்டின் போராட்டம். இங்கு இந்தியாவைச் சேர்ந்த இளம் மாணவர்கள் இருக்கிறீர்கள். நம் நாட்டின் நிலை குறித்து இந்திய மாணவர்களிடம் பேச விரும்புகிறேன். அது என்னுடைய உரிமை. நான் எனது வெளிநாட்டுப் பயணங்களில் இதுபோன்ற உரையாடலை செய்கிறேன், நிலைமை எடுத்துக் கூறுகிறேன். யாரிடமும் ஆதரவு கோரவில்லை.
பிரதமர் மோடி இதுபோன்ற உரையாடலை மாணவர்கள் மத்தியில் ஏன் நிகழ்த்துவதில்லை? என்று எனக்குப் புரியவில்லை" என்று கூறினார். அப்போது, அரங்கம் முழுவதும் நிரம்பியிருந்த மாணவர்கள் கரவொலி எழுப்பினர். இதனிடையே பேசிய பல்கலைக்கழக நிர்வாகிகள், பிரதமர் மோடி எப்போது வேண்டுமானாலும் ஸ்டான்போர்டுக்கு வரலாம் என்றும், இந்திய மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் உரையாடலாம் என்றும் தெரிவித்தனர்.
ராகுல்காந்தி தகுதி நீக்கம்:
2019 நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலிருந்து எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். பிரதமர் மோடியை விமர்சித்தது தொடர்பான அவதூறு வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடந்த மார்ச் மாதம் சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து ராகுல்காந்தி எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.